கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் கடல் சீற்றம்

278 0

201611030943510478_cuddalore-villupuram-district-furious-sea-2nd-day-fishermen_secvpfகடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் 2-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை. படகுகள் அனைத்தும் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அந்தமான் அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி உள்ளது. இதனால் தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், கடலூர், விருத்தாசலம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.கடலோர பகுதிகளில் 45 கிலோ மீட்டர் முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் கட லூரில் இன்றும் கடல் மிகவும் சீற்றமாக காணப்பட்டது. ராட்சத அலைகள் எழுந்தன. கடற்கரை பகுதியில் பலத்த காற்று வீசுகிறது.எனவே கடலூர் துறைமுகம், தேவனாம்பட்டிணம், தாழங்குடா, சித்திரைபேட்டை, பரங்கிப்பேட்டை, ராசாபேட்டை உள்பட 50-க்கும் மேற்பட்ட கடலோர கிராம மீனவர்கள் இன்று 2-வது நாளாக மீன் பிடிக்க செல்லவில்லை.

படகுகள் அனைத்தும் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. விழுப்புரத்தில் பெய்த கனமழையால் புதுவை சாலையில் உள்ள காந்தி சிலை அருகே மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.உளுந்தூர்பேட்டை வாரச்சந்தையில் தண்ணீர் தேங்கியதால் காய்கறி வாங்க வந்திருந்த பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்திலும் கடல் சீற்றமாக காணப்படுகிறது. இதன் காரணமாக பெரும்பாலான மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.