வசீம் தாஜூதீன் கொலை தொடர்பான சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் காவற்துறை அதிகாரிகளது விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அவர்களை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்றைய தினம் கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் முன்னிலையில் பிரசன்னப்படுத்த போதே இந்த விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
வசீம்; தாஜூதீன் கொலை தொடர்பான சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் பிரதி காவற்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் நாரஹேன்பிட்டி குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதேவேளை, தாஜூதீனின் கொலை இடம்பெற்ற தினத்தில் நாரஹேன்பிட்டிய காவல்நிலைய முன்னாள் பொறுப்பதிகாரியின் கையடக்க தொலைபேசிக்கு கிடைக்கப்பெற்ற அழைப்புகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி இதனை அறிவித்தார்.
அத்துடன், மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு 26 மனித உடற் பாகங்கள் கிடைக்கப்பெற்ற விதம் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி மாலபே தனியார் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, 19 உடற்பாகங்கள் மீட்கப்பட்ட அதேவேளை, அதன்பின்னரான தேடுதலின் போது மேலும் 7 உடற்பாகங்கள் மீட்கப்பட்டிருந்தன.
பின்னர் குறித்த உடற்பாகங்கள் மரபனு சோதனைகளுக்காக ஜின்டெக் நிறுவனத்திடம் ஒப்படைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.