உரிய முறைகள் இன்றி தற்பொழுது வரையில் நடைமுறைப்படுத்தப்பட்ட கிழக்கு கொள்கலன்கள் முனையத்தின் எதிர்கால அபிவிருத்திச் செயற்பாடுகளை துரிதகதியில் முன்னெடுத்து பெருமளவான கப்பல் நிறுவணங்களை ஈர்க்க செயற்பாடுகளை முன்னெடுப்பது அத்தியாவசியமானதென கப்பல்துறை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சில் நடைப்பெற்ற கலந்துரையாடலில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இக்கருத்தினை வெளியிட்டார்.
இக்கலந்துரையாடலின் பொழுது தற்சமயம் இலங்கை துறைமுக அதிகார சபையில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பிலும் அமைச்சர் அவதானம் செலுத்தினார்.
கிழக்கு கொள்கலன்கள் முனைய செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு மற்றும் கொள்கலன்கள் செயற்பாட்டினை முன்னெடுப்பதற்குள்ள தடங்கல்கள் தொடர்பில் விபரிக்குமாறு அமைச்சர் இலங்கை துறைமுக அதிகார சபையின் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “இம்முனையத்திற்காக பாரந்தூக்கிகளை இன்னும் கொள்வனவுச் செய்யவில்லை. 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற அரசியல் மாற்றத்துடன் இச்செயற்பாடு இடைநிறுத்தப்பட்டது.
அதன் பின்னர் அரச- தனியார் கூட்டுரிமை (Public – Private Partnership) முறையிற்கு செல்வதாக தீர்மானிக்கப்பட்டது. எப்படியேனும் இம்முனையத்திற்கு பார தூக்கிகளை கொண்டுவந்து இம்முனைய செயற்பாடுகளை ஆரம்பிப்பதென தீர்மாணித்த போதிலும் அது நடை முறைப்படுத்தப்படவில்லை.
இதனடிப்படையில் இந்தியா மற்றும் ஜப்பான் இடையே 2019 ஆம் ஆண்டு மே மாதம் கூட்டுறவு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இவ்வொப்பந்தத்தின் அடிப்படையில் பாரந்தூக்கிகளை ஜப்பானிய அரசாங்க விநியோகஸ்தரிடமிருந்து கொள்வனவுச் செய்ய வேண்டும்.
இதன் பொருட்டு குழுவொன்றினை நியமத்த போதிலும் உரிய செயற்பாடுகளை முன்னெடுக்க முடியவில்லை. கூட்டுறவு ஒப்பந்தத்தின் அடிப்படையில் எம்முடைய பணத்தை கொண்டு பாரந்தூக்கிகளை கொள்வனவுச் செய்வதற்கான திறன் எம்மிடமிருந்தமையினால் அமைச்சரவை அனுமதியுடன் இந்த பாராந்தூக்கிகளை கொள்வனவுச் செய்வதற்கு தீர்மாணித்தோம். ஆனால் அத்தீர்மானத்தையும் எம்மால் நிறைவேற்ற இயலவில்லை” என கூறினார்.