வாள்வெட்டுக் குழுக்களின் விபரங்கள் இராணுவத்தினரிடம் உள்ளதாலேயே அதனைக் கட்டுப்படுத்த முயல்கின்றனர்-சீ.வி.விக்னேஸ்வரன்

399 0

lanka_1610364fஆவா குழு, சனா குழு என்பவை இராணுவத்தினரால் அடையாளப்படுத்தப்பட்ட குழுக்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த இராணுவத்தினரால் முடியுமென்றால் அவர்கள் பற்றிய சகல விவரங்களும் இராணுவத்தினரிடம் உண்டு என்பதே உண்மையாகின்றது என வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் கூறினார்.

கரைத்துறைப்பற்றுப் பிரதேச செயலகக் கலாசாரவிழா, நேற்று முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே முதல்வர் இவ்வாறு கூறினார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய வடக்கு மாகாண முதலமைச்சர்,
‘எமது இளம் தலைமுறையில், பலரின் நடவடிக்கைகள் எமக்கு மிகுந்த மனவேதனையைத் தருவதாக அமைகின்றது. வடமாகாணத்தைப் பொறுத்த வரையில் ஒரு பண்பான, படித்த சமூகம் என்ற சிறப்புப் பெயரை கொண்டிருந்தது. ஆனால் அந்த சமூகம் இன்று பல வழிகளிலும் சீரழிக்கப்பட்டு வருகின்றது என்பதே உண்மை

வாள் வெட்டுக் கலாச்சாரம், போதைப்பொருள் கலாச்சாரம் பாலியல் முறைகேடுகள் என பல்வேறு வழிகளில் எமது வாழ்வியல் பண்பாடுகள் சீரழிக்கப்படுகின்றன. இவை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாதவை. இவற்றின் பின்னணியில் யார் இருக்கின்றார்கள் என்று தெரிந்தும் நடவடிக்கைகள் எடுக்க முடியாத நிலை காணப்படுகிறது.

அண்மையில் இராணுவ வீரர்கள் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார்களாம். பாதுகாப்பு கடமைகளை எமது கைகளில் ஒப்படையுங்கள், நாம் வாள்வெட்டுக் கலாச்சாரத்துடன் தொடர்புடைய ஆவா குழு மற்றும் சனா குழு ஆகியவற்றை முழுமையாக எமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து இல்லாதொழிக்கின்றோம் என்று கூறியிருந்தார்கள்.

குறித்த குழுவினர் பற்றிய செயற்பாடுகள் பற்றி இராணுவ வீரர்கள் ஏற்கெனவே அறிந்து வைத்திருக்கிறார்களோ என எண்ணத் தோன்றுகின்றது. அவ்வாறாயின் அவர்களைக் கைது செய்வதற்கும், ஏற்ற சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் ஏதுவாக பொலிஸாருடன் இணைந்து அவர்கள் ஏன் செயற்படக்கூடாது என்ற கேள்வி எழுகின்றது.

வட பகுதியில் தமிழ் பேசுகின்ற பொலிஸாரின் எண்ணிக்கை மிக குறைவானது எனவும் கூடுதலான தமிழ் இளைஞர்களை பொலிஸ் சேவையில் அமர்த்துமாறும் நாம் பொலிஸ் திணைக்களத்தைத் தொடர்ந்து வற்புறுத்திவருகின்றோம். இன்னும் அது நடைபெறவில்லை. ஆனால், பயிற்சிகள் 400 தமிழ் இளைஞர்களுக்குக் களுத்துறையில் ஏற்கெனவே கொடுக்கப்பட்டுள்ளன.

இந் நிலையில் வடபகுதியில் இருக்கும் தமிழ் பொலிஸ் உத்தியோஸ்தர்களை வடபகுதியை விட்டு வெளியே செல்லுமாறு அநாமதேய அறிவிப்புக்களும் விடுக்கப்படுவதாகக் கூறப்படுகின்றது. இவை அனைத்தும் எம்மைச் சுற்றி ஏதோ ஒரு தவறான செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருவதையே எமக்கு உணரத்துவதாக உள்ளது.

தெற்கில் பிரபாகரன் படை என்று ஒன்று துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து இராணுவத்துக்கு எதிரான சுலோகங்களைக் கக்கி வருகின்றது. இவை நம்மவரா அல்லது வேறு சக்தியா என்ற ஐயப்பாடு எழாமல் இல்லை. எனவே, நாம் இச் சந்தர்ப்பத்தில் எமது உணர்ச்சிகளுக்கும் மனக்கிலேசங்களுக்கும் இடம்கொடுக்காது எமது வருங்கால சந்ததியின் நன்மை கருதியும் அவர்களை முறையாக நெறிப்பத்த ஏற்ற வகையிலும் திட்டங்களை வகுத்து அதற்கமைவாக செயற்பட அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டிய ஒரு தருணம் இது என்பதை நாம் மனதில் கொள்ளுதல் அவசியம்.

அரசியல் என்ற நிலைக்கு அப்பால் தமிழர்கள் இன்னும் 25 அல்லது 50 வருடங்களில் இப்பகுதிகளில் எவ்வாறு வாழ வேண்டும். அவர்களுக்கு எழுச்சி மிக்கதும் சுகாதாரமானதுமான ஒரு வாழ்க்கை முறைமையை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அவர்கள் எவ்வாறு வழிநடாத்தப்பட வேண்டும். என்ற பல கேள்விகள் தற்போது எம்மை வாட்டி வதைக்கின்றன. எமது தூரநோக்குச் சிந்தனையின் கீழ் எமது மக்களுக்கு ஆற்றப்படவேண்டிய அத்தியாவசிய சேவைகள் முன்னெடுக்கப்பட்டு அவற்றில் வெற்றி காணப்படல் வேண்டும் என்ற எண்ணமும் எம்மை வாட்டி வருகின்றன.

‘மாற்றங்கள் மட்டுமே மாறாதவை’ என்ற கோட்பாட்டிற்கமைவாக எமது அரசியல் சூழ்நிலைகள் விரைவில் நல்ல மாற்றங்களை கொண்டு வரும் என நாம் நம்புகின்றோம். தற்போதைய அரசாங்கம் இரண்டு பிரதான கட்சிகளின் ஒரு சங்கமமாக உருவாகியுள்ளதால் இனப் பிரச்சினைகள் தொடர்பாக கூடுதலாகக் கவனம் எடுத்துவர வாய்ப்பிருப்பது எமக்குச் சற்று மனஆறுதலைத் தருகின்றது’ என்று மேலும் தெரிவித்தார்.