மாலபே தனியார் வைத்திய கல்லூரியை தடைசெய்யக் கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா வைத்தியசாலை முன்பாக இன்று இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தில் வைத்தியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வைத்தியர்கள் அங்கிருந்து வவுனியா பஸார் வீதி வழியாக ஊர்வலமாக சென்று நகரை அடைந்து கார்க்கில்ஸ் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மோசடியில் ஈடுபடும் மாலபே நிறுவனத்தை தடைசெய்ய வேண்டும், பெரியளவிலான பணத்தால் செய்யப்படும் ஊழல்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், நோயாளர்களை காப்பாற்று, நோயாளர்களின் உரிமையை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும், அரச வைத்திய சபையின் கடமையை செய்ய விடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முன்வைத்தனர்.
சர்ச்சைக்குரிய மாலபே தனியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.