சிங்கள வேட்பாளரை சுட்டிக்காட்ட முடியாது என்று மறைமுகமாக தமிழ் வேட்பாளரை சுட்டிக்காட்டிய சிலர் உள்ளனர். ஆனால் எது சரி என்ற முடிவை மக்கள் எடுத்தனர். அந்த தீர்மானத்தை நாமும் எடுத்தோம். இந்த வாக்களிப்பு முறையை இனத்துவேசமான அல்லது இனரீதியான வாக்களிப்பு என்று தென்னிலங்கையில் பலர் கூற முனைகின்றனர். அதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.
இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று (26) மதியம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார். மேலும்,
தமிழ் மக்கள் அடுத்தடுத்து ஜனாதிபதி தேர்தலில் அன்னத்துக்கே வாக்களித்தனர். அது ராஜபக்ச குடும்பத்திற்கு எதிரானது. அதற்கு பல காரணங்கள் இருக்கின்றது. நாங்கள் மூன்று தடவை வாக்களித்ததும் சிங்கள பௌத்த தேசிய வாதிக்கே. அதுமட்டுமல்ல ஏராளமான சிங்கள பௌத்த மக்களும் சஜித்துக்கு வாக்களித்தனர். அந்த வாக்குகளை சிங்கள பௌத்ததுக்கு எதிரான வாக்களிப்பு என்று சொல்ல முடியாது. எனவே இனரீதியான வாக்களிப்பு என்பதை ஏற்கமாட்டோம்.
ஆனால் கோத்தாபய தனியே சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளையே பெற்றார். சிறுபான்மையினரின் வாக்குகளை பெறவில்லை. இது அவர்களுக்கு மிகப்பெரிய அவமானம். ஒரு நாட்டில் ஜனாதிபதியானவர் நாட்டில் உள்ள ஒரு சிறுபான்மையினரின் நம்பிக்கையை பெற வேண்டும். அவர் அதனைக் கூட பெற்றிருக்கவில்லை. ஆகவே இதனை அவர்கள் தட்டிக்கழிக்கமுடியாது.
இந்நாட்டில் தேசிய பிரச்சினை இருக்கிறது தமிழ் தேசிய பிரச்சினை அது தீர்த்து வைக்கப்பட வேண்டும்.
தமிழ் மக்களை பொறுத்த வரையில் இந்த ஆட்சி மாற்றம் நாம் விரும்பாத ஒன்று. இது இன்னும் மோசமான நிலையை அடைய கூடாது. அதற்கு வெற்றி பெற்ற தரப்பு நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெற கூடாது. எனவே எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிக பலத்துடன் நாடாளுமன்றம் செல்ல வேண்டும். தமிழர் தரப்பு பலம் எக்காரணத்தாலும் குறைநதுவிடக் கூடாது.
அதனைச் செய்வதாக இருந்தால் நாங்கள், தமிழ் மக்கள் வடக்கு, கிழக்கிலும் தேவையென்றால் அதற்கு வெளியிலும் ஒற்றுமை பெற வேண்டும். அதை குழப்பும் வகையில் மாற்று அணிகள் உருவாக்கப்படக் கூடாது. மாற்று அணிகள் தமக்கும் ஆதரவு இருக்கா இல்லையா என சோதித்து பார்க்கும் நேரம் இதுவல்ல. அவர்கள் இந்த நாடாளுமன்ற தேர்தலில் அத்தகைய பரீட்சார்த்த முயற்சியை செய்து மக்களின் ஒற்றுமையை குழப்ப கூடாது என்று அன்பாக கேட்டுக் கொள்கிறோம்.
நாங்கள் எவரையும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியே செல்லுமாறு சொல்லவில்லை. எவரையும் உள்ளே விட நாம் தயார். இந்த முக்கிய காலகட்டத்தில் அனைத்து தமிழ் தரப்பையும் எம்மோடு வந்து இணைந்து கொள்ளுமாறு அன்பாக, பணிவாக தமிழ் மக்கள் சார்பில் அழைப்பு விடுகிறேன். இது வரலாற்று தருணம் இதை தவறாக உபயோகிக்க வேண்டாம்.
அபிவிருத்தி மூலமே நல்லிணக்கம் ஏற்படுமென்று ஜனாதிபதி கூறுகிறார். நாம் ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் அபிவிருத்திக்குத் தடையாக இருக்கப்போவதில்லை. அதற்கு ஒத்துழைப்போம். ஆனால் அபிவிருத்தி மூலம் தமிழ் தேசிய பிரச்சினை தீர்ந்துவிடாது என்பதை அவரிடம் வினயமாக கூறிக்கொள்கிறேன். – என்றார்.