இன்னும் இரண்டு சி.ஐ.டி.அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேற திட்டம்- விமல்

277 0

குற்றப்புலனாய்வு அதிகாரிகள் மேலும் இரண்டு பேர், நாட்டை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை, தொழில் முயற்சி, கைத்தொழில் அமைச்சராக நேற்று (திங்கட்கிழமை) தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட விமல் வீரவன்ச, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்தகாலத்தில் சட்டத்தை அமுல்படுத்திய சி.ஐ.டி அதிகாரியொருவர் நாட்டைவிட்டு வெளியேறி விட்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிரான குற்றச்சாட்டு விசாரணைகள் மற்றும் இராணுவத்தினர் சிறையிலடைக்கப்பட்டமைக்கு சி.ஐ.டி.யின் விசாரணை அதிகாரி நிஷாந்த டி சில்வாவே முக்கியமானவர். அதனாலேயே அவர் நாட்டை விட்டு வெளியேறி, அரசியல் தஞ்சம் கோரியுள்ளார்.

இந்நிலையில், மேலும் இரண்டு சி.ஐ.டி.அதிகாரிகள், நாட்டைவிட்டு வெளியேற திட்டமிட்டுள்ள தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் தமது குடும்பத்தை கைவிட்டு தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளனர். இது பற்றி பாதுகாப்பு செயலாளருக்கு தகவல் தெரிவித்துள்ளோம்.

இதேவேளை பெரும்பாலான மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். எனவே அவர்களின் எதிர்பார்ப்பை ஒருபோதும் வீணடிக்கமாட்டோம்” என குறிப்பிட்டுள்ளார்.