இந்தியப் பயணத்தின்போது பேசப்படும் விடயங்கள் குறித்து ஜனாதிபதி கோட்டாபய வெளியிட்ட தகவல்!

292 0

இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக் கூடிய நடவடிக்கைகளில் ஈடுபட முடியாதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்யேக செவ்வியில், இந்தியப் பயணத்தின்போது பேசப்படும் விடயங்கள் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. இதன்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒரு நட்பு நாடு என்ற வகையில் இந்தியாவுடன் சேர்ந்து பணியாற்றுவோம் என்பதை இந்திய அரசாங்கத்துக்கு மீண்டும் நான் உறுதியாகக் கூறுவேன். இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு பாதகமாக அமையக்கூடிய எந்தவொரு காரியத்திலும் நாம் ஈடுபட மாட்டோம்.

இந்தியப் பயணத்தின்போது பலதுறைகளில் முதலீடுகளை செய்து எமக்கு உதவுமாறு நான் அவர்களிடம் வேண்டுகோள் விடுப்பேன்.

கல்வித்துறையிலும் தொழில்நுட்ப அபிவிருத்தியிலும் எமக்கு உதவுமாறு கேட்பேன். அது முக்கியமானதாகும். தற்போதைய இந்திய அரசாங்கமும் பிரதமர் நரேந்திர மோடியும் அயல் நாடுகளுடனான அணுகுமுறைகளை மாற்றிக்கொண்டிருப்பதாக நான் நினைக்கின்றேன்.

நாம் சகல நாடுகளுடனும் சேர்ந்து பணியாற்றவே விரும்புகின்றோம். எந்தவவொரு நாட்டுக்கும் பாதகமாக அமையக்கூடிய எந்தவொரு செயலையும் செய்வதற்கு நாம் விரும்பவில்லை.

இந்தியாவின் அக்கறைகளின் முக்கியத்துவத்தை நாம் விளங்கிக்கொள்கின்றோம். இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய நடவடிக்கைகளில் எம்மால் ஈடுபட முடியாது.

இந்த பிராந்தியத்தில் நாம் இருக்கின்றோம். இங்கு இந்தியாவே பெரிய வல்லரசு. மற்றைய நாடுகளின் கருத்துக்களையும் விளங்கிக்கொண்டு அதன் பிரகாரம் நாம் செயற்பட வேண்டியிருக்கிறது. இன்று சகலரும் விரும்புவதும் சகலருக்கும் முக்கியமாக தேவைப்படுவதும் பொருளாதார அபிவிருத்தியேயாகும்.

அந்த பொருளாதார அபிவிருத்தியை அடைவதற்கு நாம் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட அல்லது மட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவாக இருக்க விரும்புகின்றோம். எமது நாட்டை, எமது தொழிற்துறைகளை எமது வணிகத்தை பாதுகாக்கும் அதேவேளை திறந்த போக்கையும் கடைபிடிக்க வேண்டும்.

உலகின் பொருளாதாரத்தில் ஈடுபாடு காட்டுவதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம். அதன் காரணத்தினால்தான் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளிடம் இருந்து உதவியைப்பெற விரும்புகின்றோம். இது முக்கியமானதாகும். ஆனால் யதார்த்த நிலைக்கும் நாம் முகங்கொடுக்க வேண்டியிருக்கிறது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.