யாழ் பல்கலை மாணவர்கள் கொலை தொடர்பில் ஒரு வாரத்திற்குள் தீர்வு

358 0

z_fea800யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர், பொலிஸாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், ஒருவார காலத்துக்குள் விசாரணையை முடிவு செய்து, குற்றப்பத்திரிகையை சமர்ப்பிப்பதற்கு, நீதித்துறையிடம் கோரிக்கை ஒன்றை முன்வைப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உறுதியளித்துள்ளார்.

அண்மையில் கொக்குவில், குளப்பிட்டி பகுதியில், பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களான கலைப்பீடத்தில் 3ஆம் வருடத்தில் கல்வி கற்கும் கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜன் (வயது 23), சுன்னாகத்தைச் சேர்ந்த விஜயகுமார் சுலக்ஷன் (வயது 24) ஆகிய மாணவர்கள் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவத்தையடுத்து, பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டன.
தொடர்ந்து, நேற்று, பல்கலைக்கழகத்தின் அனைத்துச் செயற்பாடுகளையும் முடக்கும் நடவடிக்கையில், மாணவர்கள் ஈடுபட்டனர்.

இந்நிலையில், குறித்த பல்கலைக்கழகத்தின் மாணவர்களையும் பல்கலைக்கழக நிர்வாகத்தினரையும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்றுச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இந்நிலையில் ஜனாதிபதியை சந்தித்த 16 மாணவர்களும், தங்கள் கோரிக்கைகளை, ஜனாதிபதியிடம் முன்வைத்தனர்.

இதன்போது, குறித்த விவகாரம் தொடர்பில், ஒருவார காலத்துக்குள் விசாரணையை முடிவுறுத்தி, குற்றப்பத்திரிகையை சமர்ப்பிப்பதற்கு, நீதித்துறையிடம் கோரிக்கை முன்வைப்பதாக, ஜனாதிபதி உறுதியளித்ததோடு, இது தொடர்பில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவுடன் கலந்துரையாடவுள்ளதாகவும், ஜனாதிபதி கூறினார்.

அத்தோடு கொலை செய்யப்பட்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு, தலா 10 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என, மாணவர்கள் தரப்பிலிருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

இக் கோரிக்கைக்குப் பதிலளித்த ஜனாதிபதி, படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும், ஒரு மாத காலத்துக்குள் செய்வதாகவும் உடனடியாக அவர்களுக்கு என்ன தேவை எனக் கண்டறிந்து, அதற்கிணங்க அத்தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுப்பதாகவும், அதன்பிறகே, அவர்களுக்கான நட்டஈட்டை வழங்குவதாகவும், உறுதியளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சந்திப்பு தொடர்பில் கருத்துத் தெரிவித்த மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், “பாதிக்கப்பட்ட மாணவர்கள் இருவரதும் குடும்பங்களுக்காக, இரு வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கவும், அவர்களின் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்புத் தேவைப்படின், அதனை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுப்பதாக, உறுதியளித்துள்ளார்” எனக் கூறினார்.