ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டம் கடந்த 1993-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி விழுப்புரம், கடலூா் மாவட்டங்களாக பிரிக்கப் பட்டன. விழுப்புரம் மாவட்டம் 1,104 கிராமங்கள், 13 வட்டங்கள், 4 கோட்டங்களுடன் 7,217 சதுர கி.மீ பரப்பில் 34.58 லட்சம் மக்கள் தொகையுடன் (2011-கணக் கெடுப்பின்படி) மிகப் பெரிய மாவட்டமாக இருந்தது.
இந்த மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டுமென கடந்த 15 ஆண்டுகளாக விழுப்புரம் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் வலியுறுத்தினர். இதையேற்று விழுப்புரம் மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக பிரித்து கள்ளக் குறிச்சியை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று முதல்வா் பழனிசாமி கடந்த ஜனவரி 8-ம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து இன்று (நவ. 26) கள்ளக்குறிச்சி மாவட்டத்தை துவக்கி வைத்து நலத்திட்ட உதவி களையும் முதல்வர் பழனிசாமி வழங்கவுள்ளார். புதிய மாவட்ட ஆட்சியராக கிரண்குரலாவும், எஸ்பியாக ஜெயசந்திரனும் ஏற்கெனவே நியமிக்கப்பட் டுள்ளனர்.
மாவட்ட எல்லை விவரம்
3,520 சதுர கி.மீ பரப்பளவுடன் கூடிய கள்ளக்குறிச்சி மாவட்டத் தில் 23 குறு வட்டங்கள், 406 கிராம ஊராட்சிகள், 558 வருவாய் கிராமங்கள் உள்ளன. கள்ளக்குறிச்சியை தலைமை யிடமாகக் கொண்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூா் ஆகிய வருவாய் கோட்டங்கள் உள்ளன.
வருவாய் வட்டங்கள்: கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்ன சேலம், திருக்கோவிலூா், உளுந்தூா்பேட்டை, கல்வராயன் மலை (புதியது).
நகராட்சி: கள்ளக்குறிச்சி, பேரூராட்சிகள்: திருக் கோவிலூர், சங்கராபுரம், தியாக துருகம், சின்னசேலம், வடக் கனந்தல், மணலூர்பேட்டை, உளுந் தூர்பேட்டை.
ஊராட்சி ஒன்றியங்கள்: கள்ளக் குறிச்சி, சின்னசேலம், ரிஷிவந் தியம், சங்கராபுரம், தியாகது ருகம், கல்வராயன்மலை, திருக் கோவிலூர், உளுந்தூர்பேட்டை, திருநாவலூர்.
சட்டப்பேரவைத் தொகுதிகள்: கள்ளக்குறிச்சி (தனி), உளுந்தூர் பேட்டை, சங்கராபுரம், ரிஷிவந் தியம், திருக்கோவிலூர்.
மக்களவைத் தொகுதிகள்: கள்ளக்குறிச்சி (பகுதியளவு), விழுப்புரம் (பகுதியளவு).
19 காவல் நிலையங்கள், 3 உட்கோட்ட காவல் பிரிவுகள் செயல்படுகின்றன. மாவட்டத் தில் தலைமையிடமான கள்ளக் குறிச்சியிலிருந்து அதிக தொலைவில் உள்ள கிராமமாக சங்கராபுரம் வட்டத்தைச் சேர்ந்த வாரம் கிராமம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய மாவட்டம் உருவாக்கப் பட்டிருப்பது அனைத்து அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.
கள்ளக்குறிச்சி மற்றும் சின்னசேலம் பகுதியில் சுமார் 35 நவீன அரிசி ஆலைகள் உள்ளன. இங்கு நாளொன்றுக்கு 500 டன் அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தத் தொழிலில் நேரடியாக சுமார் 1,500 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தற்போது மாவட்டம் உருவாக்கப்பட்ட நிலையில் அரிசித் தொழிலை மேம்படுத்த வேண்டும் என்பது அரிசி உற்பத்தியாளர்களின் கோரிக்கையாக உள்ளது.
சுற்றுலா மேம்பாடு
தற்போது கல்வராயன்மலை தனி வட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளால் மலைவாழ் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் வெள்ளி அருவி, மேகம் அருவி, சிறுக்களூர் அருவி உள்ளிட்டவற்றை மேம்படுத்தி பூங்கா உருவாக்கினால் சுற்றுலா பயணிகள் வர வாய்ப்புள்ளதாக மலைவாழ் மக்கள் உரிமை நலச் சங்கத் தலைவர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள மிகப்பெரிய நீர்தேக்கம் கோமுகி அணை. இங்கு ஏற்கெனவே பூங்கா ஒன்று செயல்பட்டு வந்தாகவும், தற்போது அந்தப் பூங்கா பராமரிப்பின்றி இருப்பதால் அதை சீரமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
சிக்கல் தீருமா?
மாவட்ட பிரிப்பில் திருவெண்ணெய்நல்லூர் கிராமம் சர்ச்சைக்குள்ளானது. இதையடுத்து உளுந்தூர்பேட்டை வட்டத்திலிருந்த திருவெண் ணெய்நல்லூரை பிரித்து தனி வட்டம் உருவாக்கப்பட்டு விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.
இருப்பினும் கருவேப் பிலைபாளையம் என்ற கிராமம் பெரும் சிக்கலை சந்தித்துள்ளது.
இக்கிராமத்தில் பாதியளவு விழுப்புரம் மாவட்டத்துடன் எஞ்சிய பாதி கள்ளக்குறிச்சி மாவட்டத்துடனும் இணைக் கப்பட்டுள்ளதால் அக்கிராம மக்கள் கடந்த 10 தினங்களாக தொடர் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக திருக் கோவிலூர் எம்எல்ஏவான பொன்முடி கூறுகையில், “மாவட்ட பிரிப்பின் போதே தாலுகா அளவில் பிரிக்காமல், பிர்கா அளவில் பிரிக்க வலியுறுத்தினோம். நாங்கள் கூறியது போல் பிரித்தாலும், திருவெண்ணெய்நல்லூரில் உள்ள கருவேப்பிலைபாளையம் ஊராட்சியை முழுவதுமாக திருவெண்ணெய்நல்லூரில் இணைப்பதில் என்ன பிரச்சினை உள்ளது? அந்த மக்களின் நலனை புறக்கணிப்பதேன்?” என்றார்.
கள்ளக்குறிச்சியா? கல்லைக்குறிச்சியா?
கள்ளக்குறிச்சியில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் கோயில் கல்வெட்டு மற்றும் சிறுவங்கூர் கிராமத்து பெருமாள் கோயில் கல்வெட்டுகளிலும் கல்லைக்குறிச்சி என்ற பெயரே பொறிக்கப்பட்டுள்ளதாகவும், காலப்போக்கில் மருவி கள்ளக்குறிச்சி என்ற பெயர் மாறியதாகவும் கூறப்படுகிறது. இதனால் கள்ளர்கள் வாழ்ந்த ஊர் என்ற வாய்மொழி வரலாறு தோன்றிட காரணமானதால், கல்வெட்டு ஆதாரங்களைக் கொண்டு கள்ளக்குறிச்சியை, கல்லைக்குறிச்சி என அரசிதழில் வெளியிட முதல்வர் முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் முன்வைத்துள்ளனர்