பொன் மாணிக்கவேல் சிலைக்கடத்தல் தடுப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடையும் நிலையில் அவரது பணியை நீட்டி உத்தரவிடக்கோரி டிராபிக் ராமசாமி, பொன் மாணிக்கவேல் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் விசாரணை உள்ளதை மேற்கோள்காட்டி எந்த உத்தரவும் இல்லை என உயர் நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.
சிலை கடத்தல் வழக்குகளில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, பொன்.மாணிக்கவேல், தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இதேப்போன்று டிராபிக் ராமசாமியும் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கடந்த 21-ம் தேதி நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சிலை கடத்தல் வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை என தமிழக அரசுத் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. டி.ஜி.பி நடத்தும் கூட்டங்கள் எதிலும் பொன். மாணிக்கவேல் கலந்து கொள்வதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பொன் மாணிக்கவேலுக்கு செய்து கொடுத்த வசதிகள் குறித்து தமிழக அரசும், இதுவரை விசாரித்த வழக்கு விபரங்கள் குறித்து பொன் மாணிக்கவேல் தரப்பும் எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவ.25-ம் தேதி (இன்று) ஒத்திவைத்தனர்.
இந்த இரண்டு வழக்குகளும் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நவம்பர் 30-ம் தேதியுடன் பொன். மாணிக்கவேலின் பதவி காலம் முடிவடைவதால், அதன் பின் அவரை பணி நீக்கம் செய்ய அரசு முயற்சிப்பதாக டிராபிக் ராமசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைக்கேட்ட நீதிபதிகள், கடந்த ஆண்டு, நவ. 30-ம் தேதி சிறப்பு அதிகாரியாக பொன். மாணிக்கவேலை நியமித்தபோது பிறப்பித்த உத்தரவில், ஓராண்டு அல்லது அடுத்த உத்தரவை பிறப்பிக்கும் வரை சிறப்பு அதிகாரியாக பொன். மாணிக்கவேல் நீடிப்பார் என்று தெளிவாகவே தெரிவித்துள்ளோம் என்று சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அவரது பதவிக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை என தெரிவித்தனர்.
மேலும், பதவி நீட்டிப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் பொன்.மாணிக்கவேல் பதவி நீட்டிப்பு குறித்து உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது என்றும், உச்சநீதிமன்றத்தில் இதுகுறித்து அரசுத்தரப்போ அல்லது எதிர்த்தரப்போ முறையீடு மூலம் உரிய வழிகாட்டுதல் பெற்று வந்தால் அதை வைத்தே தாங்கள் உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியும் என்று தெரிவித்தனர்.
ஆகவே வழக்கு உச்சநீதிமன்றத்தின்கீழ் விசாரணையில் உள்ளதால் பதவி நீட்டிப்பு குறித்த எத உத்தரவையும் தாங்கள் பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்து வழக்கை டிசம்பர் 6-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.