முல்லைப்பெரியாறு அணை தொடர்ந்து தமிழகத்தின் முழு கட்டுப்பாட்டில் இருக்கும் என மத்திய ஜல்சக்தி மந்திரி உறுதிபட கூறியுள்ளார்.பேரழிவுகளை தடுக்கும் வகையில் நாட்டின் முக்கியமான அணைகளின் கண்காணிப்பு, ஆய்வு, பராமரிப்பு, இயக்கம் போன்றவற்றுக்காக நிறுவன வழிமுறையை உருவாக்க வகை செய்யும் புதிய மசோதா ஒன்றை மத்திய அரசு கொண்டு வந்தது. அணை பாதுகாப்பு மசோதா எனப்படும் இந்த மசோதா, கடந்த ஆகஸ்டு மாதம் மக்களவையில் நிறைவேறியது.
இந்த மசோதா, மாநில அரசின் அணைகள் தொடர்பான உரிமைகளை பறிப்பதாக கூறி பல்வேறு மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. குறிப்பாக முல்லைப்பெரியாறு போன்ற அணைகள் விவகாரத்தில் தொடர்ந்து நதிநீர் பங்கீட்டு சிக்கல்களை அனுபவித்து வரும் தமிழக அரசும், தமிழக கட்சிகளும் இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தன.
இந்த சந்திப்பை தொடர்ந்து மந்திரி கஜேந்திர சிங் செகாவத் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
முல்லைப்பெரியாறு அணையின் முழு கட்டுப்பாட்டு அதிகாரமும் தமிழகத்திடமே தொடர்ந்து இருக்கும். இந்த அணையின் உரிமை, அதன் வழக்கமான இயக்கம், பராமரிப்பு மற்றும் தமிழகத்தின் நீர் உரிமை போன்றவற்றில் ஏற்கனவே இருந்த நிலைதான் தொடரும். இவற்றில் எந்த மாற்றத்தையும் அணை பாதுகாப்பு மசோதா ஏற்படுத்தாது.
தற்போதைய மசோதாப்படி, முல்லைப்பெரியாறு அணை அல்லது தமிழகத்தின் பிற அணைகள் மீது கேரள மாநில அணை பாதுகாப்பு அமைப்புக்கு எந்த அதிகாரமும் இல்லை.
இவ்வாறு கஜேந்திர சிங் செகாவத் கூறினார்.