பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் பிரான்சு மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு

642 0

நேற்று (24.11.2019) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு Nanterreபகுதியில் மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

நிகழ்வில், பொதுச்சுடரினை மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் திரு.நிதர்சன் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக்கொடியினை 26.06.1989; அன்று வவுனியாவில் வீரச்சாவடைந்த கப்டன் ரூபன் அவர்களின் சகோதரி; ஏற்றிவைத்தார். மாவீரர் திருஉருவப்படத்துக்கான ஈகைச்சுடரினை 02.12.1992 அன்று வண்ணான்குளம் பகுதியில் வீரச்சாவடைந்த வீரவேங்கை சரோஜன் அவர்களின் பெற்றோர்; ஏற்றிவைக்க திருஉருவப்படத்திற்கான மலர்மாலையை 27.11.1998 அன்று கோப்பாய் பகுதியில் வீரச்சாவடைந்த லெப்.உயிரவன் அவர்களின் தாயார் அணிவித்தார். அகவணக்கத்தைத் தொடர்ந்து, மாவீரர் பெற்றோர், சகோதரர்கள், பொதுமக்கள் என அனைவரும் அணிவகுத்து சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.

தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின. அரங்க நிகழ்வுகளாக தமிழ்ச்சோலை மாணவர்களின் எழுச்சி நடனங்கள், மாவீரர் கலைத்திறன்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளின் பேச்சு, தனிநடிப்பு, பாட்டு, கவிதை என்பவற்றுடன் பிரான்சு தமிழர்கலைபண்பாட்டுக்கழகப் பாடகர்களின் மாவீரர் நினைவுசுமந்த பாடல்களும் இடம்பெற்றன.
நிகழ்வில் பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தின் உருவாக்கத்தில் அனைத்துலகத் தொடர்பக வெளியீட்டுப்பிரிவினால் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 65 ஆவது அகவைதினத்தை முன்னிட்டு வெளிவரவுள்ள ‘ஈழ அரசன்” இறுவெட்டு வெளியிட்டுவைக்கப்பட்டது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுப்பொறுப்பாளர் திரு.மகேஸ், பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக்கழகப் பொறுப்பாளர் திரு.மாறன் ஆகியோர் இறுவெட்டை வெளியிட்டுவைக்க மாவீரர் குடும்ப உறவுகள் பெற்றுக்கொண்டனர்.

மதியபோசனத்தைத் தொடர்ந்து, மாவீரர் பெற்றோர் மற்றும் சகோதரர் மேடையில் நினைவுக் கேடயம் வழங்கி மதிப்பளிப்புச் செய்யப்பட்டனர்.சிறப்புரையை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா அவர்கள் ஆற்றியிருந்தார்.
வழமைபோன்று பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு வெளியீட்டுப்பிரிவினரும் தமது வெளியீட்டுப்பொருட்களை காட்சிப்படுத்தியிருந்தனர்.

அனைத்து நிகழ்வுகளும் மாவீரர்களைக் கண்முன்னே நிறுத்தியிருந்தன.
தமிழீழத் தேசியக்கொடி இறக்கப்பட்டதைத் தொடர்ந்து நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் பாடல் ஒலித்து ஓய்ந்ததும், தமிழரின்தாகம் தமிழீழத் தாயகம் என்னும் தாரகமந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுகண்டன.

( பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)