அகவை 65
பொன்னெழில் பூத்த திருமகனே வாழிய பல்லாண்டு !
செந்தமிழில் தேனெடுத்து சிந்துகவி பாட்டிசைத்து
நற்றமிழின் இனிமை பொங்க வாழ்த்துப் படுவோம் – நம்
சந்தத் தமிழ்க் காவியனை செவ்விழியின் நாயகனை
கொற்றவையின் பறையடித்து போற்றி வாழ்த்துவோம்
அறுபத்தைந்து அகவையிலும் வீறுகொண்ட காவலனை
ஏறுகின்ற வீரமேற்றி வாழ்த்துக் கூறுவோம் – நல்
அறம்பொங்கும் வீறுடையான் திமிர்கொண்ட தோளுடையான்
திறன்கொண்ட பிரபாகரனை ஏற்றிப் போற்றுவோம்
பட்டொளிரும் புலிக்கொடியை நெஞ்சினிலே சுமப்பவனை
அட்டதிக்கும் முரசு கொட்டி வாழ்த்து பாடுவோம் – பகை
முட்டவந்த களமுனையில் எகிறி நின்ற தலைமகனை
கட்டவிழ்த்த புலியிலேற்றி வீறு கொள்ளுவோம்
தமிழீழ வழி திறக்க தடையுடைத்த பெருமகனை
தமிழ்த்தாயின் கவியெடுத்து வாழ்த்து பாடுவோம் -நம்
தமிழீழத் தேசமதை வையத்தில் பதித்தவனை
தமிழீழ முடிதரித்து நெஞ்சை நிமிர்த்துவோம்
மௌனத்தில் உருவேற்றிப் போர்வளர்க்கும் நாயகனின்
அறிவொளியை உளமேற்றிப் போற்றி வாழ்த்துவோம் – நம்
தமிழீழத் தாகமதின் உணர்வினிலே வாழ்பவனின்
நம்பிக்கை கரங்களாகி உரத்தை ஏற்றுவோம்
” பிரபாகரனார் என்னும் சொல்லே ஈழம் தன்னின் அடையாளம் ”
அகரப்பாவலன்.