மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட நாவலடிக்கிராம மக்கள் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ள தமது காணிகளை மீட்டுத் தருமாறு கோரி இன்று சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் அமைந்துள்ள படை முகாமுக்கு முன்னால் கூடாரமிட்டே, குறித்த சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
1990ஆம் ஆண்டு நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக நாவலடிப்பிரதேசத்து மக்கள் இடம்பெயர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வசித்து வந்தார்கள்.
நாட்டில் தற்போது சுமுகமான நிலை உருவாகியுள்ளதால் படையினரால் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்டுத்தருமாறு அம்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், தமது, வீடுகள், கடைகள் முதற்கொண்டு தமது அனைத்து அசையும், அசையாச் சொத்துக்களை அழித்துவிட்டே படையினர் முகாம் அமைத்துள்ளனர் எனவும் அம்மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.