இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் சித்திரவதைகள் தொடர்பில் 208 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இலங்கை மனித உரிமை ஆணைக்குழு, ஐக்கிய நாடுகள் குழுவிடம் ஒப்படைக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற சித்திரவதை சம்பவங்கள் குறித்து மனித உரிமை ஆணைக்குழு 17 பக்க அறிக்கை ஒன்றை, ஐக்கிய நாடுகள் அமைப்பின் சித்திரவதைகள் தொடர்பான குழுவிடம் ஒப்படைத்துள்ளது. அண்மையில் இந்த அறிக்கை குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சித்திரவதைகள் தொடர்பில் எத்தனை வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் வினவப்பட்டதாகவும் அறிக்கை தயாரிக்கும் வரையில் பதில் கிடைக்கவில்லை எனவும் ஐ.நாவிடம் ஒப்படைக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 13 பேர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதாகும் மற்றும் தடுத்து வைக்கப்படுவோரை பார்வையிடச் செல்லும் போது பல்வேறு அசௌகரியங்களை எதிர்நேரிட்டுள்ளதாக சட்டத்தரணிகள் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலை திணைக்களத்தின் புள்ளி விபரங்களுக்கு அமைய பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் 111 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மனித உரிமைகளை மேம்படுத்தவும், சித்திரவதைகளை தடுக்கவும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக விபரித்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.