அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்த விரும்புவதாகவும், அதே சமயம் வர்த்தக போரை கண்டு பயப்படவில்லை என்றும் சீன அதிபர் ஜின்பிங் தெரிவித்துள்ளார்.உலகின் இரு பெரும் பொருளாதார வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே கடந்த ஓராண்டு காலமாக வர்த்தக போர் நடந்து வருகிறது. உலகளாவிய பொருளாதார மந்த நிலைக்கு இது முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
சீனா நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை பின்பற்றி வருவதாகவும், அமெரிக்காவின் அறிவுசார் சொத்துக்களையும், தொழில் நுட்பங்களையும் திருடி வருவதாகவும் குற்றம் சாட்டி முதலில் இந்த வர்த்தக போரை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்தான் தொடங்கினார்.
ஆனால் சீன அதிபர் ஜின்பிங், டிரம்பின் குற்றச்சாட்டை மறுத்ததுடன், அவரும் தன் பங்குக்கு அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க தொடங்கினார்.
சீன பொருட்கள் மீது அமெரிக்காவும், அமெரிக்க பொருட்கள் மீது சீனாவும் பல்லாயிரம் கோடி டாலர் வரிகளை கூடுதலாக விதித்து வருகின்றன. இதனால் இரு தரப்பு வர்த்தக போர் வலுத்து வருகிறது. அமெரிக்காவும், சீனாவும் வர்த்தக போரில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தாலும்கூட இரு தரப்புக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்த இருநாடுகளின் பிரதிநிதிகள் தொடர் பேச்சு வார்த்தை நடத்திவருகின்றனர்.
அந்த வகையில் முதல் நிலை வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாகி வருகின்றன. இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு இரு தரப்பு பிரதிநிதிகளும் தொலைபேசி வாயிலாக முக்கிய ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனை ஆக்கப்பூர்வமாக நடந்தாலும் தாங்கள் முன்வைத்த சில கோரிக்கைகளை அமெரிக்க புறக்கணித்ததாக சீனா குற்றம் சாட்டியது. அதே சமயம் சீனா இதுவரை எந்தவிதமான சலுகைகளையும் வழங்கவில்லை என்றும், பேரத்தை முடிவுக்கு கொண்டு வர தயங்குவதாகவும் ஜனாதிபதி டிரம்ப் குற்றம் சாட்டினார்.
இதற்கிடையே ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அமெரிக்க நாடாளுமன்ற செனட்சபையில் 2 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது இரு தரப்பு வர்த்தக பேச்சுவார்த்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்த சீனா விரும்புவதாகவும், அதே சமயம் தேவை ஏற்படும் பட்சத்தில் மீண்டும் போராடுவதற்கு பயப்படவில்லை என்றும் அந்த நாட்டின் அதிபர் ஜின்பிங் தெரிவித்துள்ளார். தலைநகர் பீஜிங்கில் நடைபெற்ற சர்வதேச நிதி ஆணையத்தின் கூட்டத்தில் பேசியபோது ஜின்பிங் இதனை கூறினார்.
இந்த கூட்டத்தில் சர்வதேச நிதி ஆணையத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா, அமெரிக்க முன்னாள் வெளியுறவு மந்திரி ஹென்றி கிஸ்சிங்கர், முன்னாள் நிதி மந்திரி ஹென்றி பவுல்சன் மற்றும் ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் கெவின் ரூத் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.