ஆம்னெஸ்டி தகவல் ஆதாரமற்றது: ஈரான் கடும் விமர்சனம்

339 0

ஈரான் போராட்டத்தில் 100க்கும் அதிகமானவர்கள் பலியானதாக ஆம்னெஸ்டி கூறியிருப்பது ஆதாரமற்றது என்று அந்நாடு தெரிவித்துள்ளது.

ஈரானில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் எரிவாயுப் பொருட்களின் விலை உயர்வுக்கு எதிரான போராட்டம் நடந்து வருகிறது. இதில் போராட்டக்காரர்களுக்கு எதிராக ஈரான் பாதுகாப்புப் படைகள் நடத்திய தாக்குதலில் 100க்கும் அதிகமானவர்கள் இறந்து இருக்கலாம். உண்மையில் பலி எண்ணிக்கை 200 ஆக இருக்கலாம் என்று எங்களுக்குக் கிடைத்த தரவுகள் கூறுகின்றன என்று ஆம்னெஸ்டி தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ஆம்னெஸ்டியின் இந்தக் கருத்தை ஈரான் விமர்சித்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா.வுக்கான ஈரானின் செய்தித் தொடர்பாளர் அலிரேசா கூறும்போது, ”தவறான தகவல் வெளிநாடுகளால் பரப்பப்படுகிறது. போராட்டத்தில் பலியானவர்களின் முழுமையான விவரத்தை ஈரான் அரசு இதுவரை வெளியிடவில்லை. ஆம்னெஸ்டி கூறுவதில் நம்பகத்தன்மை இல்லை” என்று தெரிவித்தார்.

ஈரானில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை 50 சதவீதம் கடந்த வாரம் உயர்த்தப்பட்டது. பொருளாதார நடவடிக்கைகளுக்காக இந்த விலை உயர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஈரான் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஈரான் அரசின் இந்த முடிவை ஈரான் மதத் தலைவர் அயத்தெல்லா காமெனி ஆதரித்தார். இந்நிலையில் ஈரான் போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஈரானில் படிப்படியாக வன்முறை குறைந்து வருவதால் நாட்டில் இயல்பு நிலை திரும்பியுள்ளதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.