ஆப்கன் அமைதி பேச்சுவார்த்தை: ட்ரம்ப் – இம்ரான் கான் தொலைபேசியில் ஆலோசனை

386 0

ஆப்கானிஸ்தான் அமைதி பேச்சுவார்த்தை குறித்தும், பிராந்திய பிரச்சினை சார்ந்தும் இம்ரான் கான் மற்றும் ட்ரம்ப் தொலைபேசியில் உரையாடல் நடத்தினர்.

இதுகுறித்து ஏஎன்ஐ தரப்பில், “ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஏற்படுவது மற்றும் பிராந்தியத்தில் நிலவும் பிரச்சினை தொடர்பாக வியாழக்கிழமை இரவு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் பாகிதாஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொலைபேசியில் உரையாடல் நடத்தினர்.

மேலும், அமெரிக்காவைச் சேர்ந்த இரு பேராசிரியர்களைத் தலிபான்களிடமிருந்து விடுதலை செய்ய உதவியதற்காக இம்ரான் கானுக்கு ட்ரம்ப் நன்றி தெரிவித்தார்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக, அமெரிக்காவைச் சேர்ந்த கெவின் கிங் மற்றும் டிமோதி விக்ஸ் என்ற இரு பேராசிரியர்களும் காபூல் பல்கலைக்கழகத்திலிருந்து 2016 ஆம் ஆண்டு கடத்தப்பட்டனர். இந்நிலையில் இம்ரான் கான் முயற்சியில் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.

மேலும், ட்ரம்ப் – இம்ரான் கான் உரையாடலில் இரு நாடுகள் குறித்த பிற உறவுகளும் ஆலோசிக்கப்பட்டதாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு அமைதியான தீர்வு காண்பதில், தேசிய அளவிலும் பிராந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் முயற்சிகள் நடந்து வருகின்றன. மேலும், ஆப்கனில் 18 ஆண்டுகளாக நடந்து வரும் போரிலிருந்து தன்னை விடுத்துவித்துக் கொள்ள அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

இதனை அடிப்படையாகக் கொண்டு ஆப்கன் அமைதிப் பேச்சுவார்த்தை அமெரிக்கா தலைமையில் நடந்தது. இதன் அடிப்படையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை தலிபான்கள் தரப்பு ஏற்றுக்கொண்டது. இந்நிலையில், ஆப்கனில் தீவிரவாதத் தாக்குதலில் அமெரிக்கப் படை வீரர்கள் கொல்லப்பட்டதற்கு தலிபான்கள் பொறுப்பேற்றனர். இதனைத் தொடர்ந்து தலிபான்களுடனான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.

இந்நிலையில் ஆப்கனில் அமைதி ஏற்பட, தலிபான்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கையில் பாகிஸ்தானும் தலிபான் பிரதிநிதிகளும் இறங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.