இமயமலையில் யாரோ சொன்னதைக் கேட்டு ரஜினி இங்கே சொல்கிறார்: திருமாவளவன்

522 0

இமயமலையில் யாரோ சொன்னதைக் கேட்டு ரஜினி இங்கே சொல்கிறார் என நடிகர் ரஜினிகாந்தை திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் 2021-ல் மிகப் பெரிய மாற்றம் வரும் என ரஜினி கூறியது தொடர்பாகக் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் “இமயமலை சென்று வந்திருப்பதால் யாராவது அவரிடம் கூறியதைத்தான் அவர் கூறியிருப்பார். கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் இணைவது என்பது நாட்டு மக்களுடைய பிரச்சினைகள் அல்ல. அவர்களுடைய தனிப்பட்ட பிரச்சினைகள்” என்றார்.

ராஜபக்ச வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

 

இலங்கை அரசியல் நிலவரம் பற்றி திருமாவளவன் பேசுகையில், ”இலங்கை தேர்தலில் புதிய அதிபராக கோத்தபய ராஜபக்சே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். தற்போது மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவி ஏற்றிருக்கிறார் . 2009-ல் லட்சக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்று குவித்து இனப்படுகொலை செய்த ராஜபக்ச குடும்பம் இப்போது ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருப்பது தமிழ்ச் சமூகத்திற்கு பெரும் அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

கோத்தபய ராஜபக்ச பதவியேற்ற உடனே ராமேஸ்வரம் பகுதியில் இருந்து கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கச் சென்ற எறத்தாழ 3000 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டுள்ளனர். இது வருத்தமளிக்கிறது.

ராஜபக்ச குடும்ப ஆட்சியில் ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் இதே நிலை என்பதற்கு இது ஒரு சான்று.

தமிழர் விரோதிகளான ராஜபக்சவின் குடும்பத்தைக் கடந்த பத்தாண்டுகளில் முறையாக விசாரணை நடத்தி இருந்தால் குற்றவாளிக் கூண்டில் இருந்திருப்பார்கள்.

அவர்கள் தேர்தலில் போட்டியிட்டு இருக்க முடியாது. சர்வதேச சமூகம் ஜ.நா.பேரவை உள்ளிட்ட சர்வதேச சமூகமும் இந்த இனப்படுகொலையை விசாரித்து இருந்தால் அவர்கள் போர்க் குற்றவாரியாக இருந்திருப்பார்கள். சர்வதேச சமூகம் அலட்சியம் காட்டியதன் விளைவாக இன்றைக்கு இந்த அவலம் ஏற்பட்டிருக்கிறது.

இதனிடையில் ராஜபக்ச குடும்பத்தைச் சார்ந்தவர்களே வரவேற்று சிறப்பு செய்ய இந்திய அரசு காத்திருக்கிறது.

வருகிற 21-ம் தேதி ராஜபக்ச இந்தியா வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டிக்கும் வகையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நாளை (சனிக்கிழமை) சென்னையில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

ராஜபக்சவின் இந்திய வருகையை எதிர்த்து வரவேற்பைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பதும் களப்பணி ஆற்றுவதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். சுயநலமும் சந்தர்ப்பவாதமும் இல்லை” என திருமாவளவன் கூறினார்.