7 பேர் விடுதலையில் திமுக இரட்டை வேடம்: அமைச்சர் கடம்பூர் ராஜு குற்றச்சாட்டு

273 0

7 பேர் விடுதலையில் திமுக இரட்டை வேடம் போடுவதாக, அமைச்சர் கடம்பூர் ராஜு கூறினார். கோவில்பட்டி அருகே முடுக்குமீண்டான்பட்டியில், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:மத்திய காங்கிரஸ் அரசில் திமுக இடம்பெற்றிருந்த நேரத்தில், தமிழகத்தில் முதல்வராக இருந்த திமுக தலைவர் கருணாநிதி நினைத்திருந்தால், இலங்கையில் நடந்த படுகொலைகளை தடுத்து நிறுத்தியிருக்கலாம்.

பெயரளவுக்கு 2 மணி நேரம் உண்ணாவிரத நாடகத்தை நடத்தி விட்டு போர் நிறுத்தப்பட்டு விட்டது எனக் கூறிய காரணத்தால்தான், ஆங்காங்கே பதுங்கியிருந்த தமிழர்கள் வெளியே வரத்தொடங்கினர். அதன் பின்னர் தான் கொத்துக்கொத்தாக தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட இனப்படுகொலை நடந்தது. இதற்கு முழுமுதற் காரணம் திமுக தான். எதிர்க்கட்சியான பிறகு வேடம்தற்போதும், 7 பேர் விடு தலையில் இரட்டை வேடம் போடுகின்றனர்.

திமுக ஆட்சியில் இருந்தபோது சட்டப்பேரவையில் 7 பேர் விடுதலைக்காக தீர்மானம் கொண்டுவரவில்லை. அவர்கள், 7 பேரும் 27 ஆண்டுகள் சிறையில் உள்ளனர். இதில், 2 முறை திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. அப்போது எல்லாம் கண்டுகொள்ளாத, தமிழர்களைப் பற்றி கவலைப்படாத திமுக, இன்று எதிர்க்கட்சியான பின்னர் தமிழ் உணர்வு, தமிழர் என்று வேஷம் போடுகிறது.

ஆனால், 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என, முதன்முதலில் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான். அவரது வழியில் தமிழக அரசு 7 பேர் விடுதலைக்கு உத்தரவாதம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. தமிழர்களுக்கு ஆதரவாக இருக்கும் இயக்கம் தான் அதிமுக என்றார்.

அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என, பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளது குறித்து கேட்டபோது, ‘‘தமிழகத்தில் பாஜகவுக்கு தலைவர் இல்லை. டெல்லியில் தேசிய செயற்குழு உள்ளது. அவர்கள் தான் கூட்டணி குறித்து முடிவு செய்வார்கள். மற்றவர்களுக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை’’ என அமைச்சர் பதில் தெரிவித்தார்.