தமிழக அரசு ஆக்கப்பூர்வமான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்: மு.க.ஸ்டாலின்

280 0

201611020738364519_stalin-emphasis-tn-government-to-embark-on-creative-efforts_secvpfதமிழகம் பொருளாதார வளர்ச்சியில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக பீடு நடை போட தமிழக அரசு ஆக்கப்பூர்வமான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தொழில் தொடங்குவதற்கு ஏற்ற மாநிலங்களின் பட்டியலில் இந்தியாவில் உள்ள 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தமிழகம் 18-வது இடத்திற்கு அ.தி.மு.க. ஆட்சியில் தள்ளப்பட்ட கொடுமை அதிர்ச்சியளிக்கிறது. “அமைதி, வளம், வளர்ச்சி” என்று வீராப்பு பேசி தமிழக மக்களை அ.தி.மு.க. அரசு தொடர்ந்து ஏமாற்றி வந்திருப்பது இப்போது உலக வங்கியும், மத்திய அரசின் தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கையில் பகிரங்கமாக தெரியவந்திருக்கிறது.

தொழில் தொடங்குவதற்கு ஏற்ற 340 அம்ச “தொழில் சீர்திருத்த திட்டங்களை” மத்திய அரசு அறிவித்தது. நிறைவேற்றப்பட்டிருக்கும் சீர்திருத்தங்கள் அடிப்படையில் மாநிலங்களின் தரவரிசை பட்டியலை மத்திய அரசின் தொழில் துறை வெளியிட்டிருக்கிறது. அண்டை மாநிலங்களான ஆந்திராவும், புதிதாக உருவான தெலுங்கானா மாநிலமும் இந்த சீர்திருத்தங்களை முறையாக நிறைவேற்றி நாட்டின் முதல் மற்றும் இரண்டாம் இடத்தை தட்டிச் சென்றிருக்கின்றன. ஆனால் அந்த சீர்திருத்தங்களை நிறைவேற்றுவதில் அ.தி.மு.க. ஆட்சி காட்டிய அலட்சியத்தால் இன்றைக்கு தமிழகம் 18-வது இடத்திற்கு தள்ளப்பட்டு விட்டது.

அது மட்டுமல்ல, தென் மாநிலங்களில் கர்நாடக மாநிலத்தையும் விட பின்தங்கி, மாநிலத்தின் தொழில் வளர்ச்சியை ஸ்தம்பிக்க வைத்த கேடுகெட்ட செயலை அ.தி.மு.க. ஆட்சி செய்திருக்கிறது. வெளிப்படைத்தன்மை, ஒற்றை சாளர முறை, தொழில் தொடங்குவதற்குரிய நிலம் வழங்குவது, கட்டுமான பணிகளுக்கு அனுமதி அளிப்பது, சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவது ஆகிய 5 சீர்திருத்தங்களையும் மிக முக்கியமாக எடுத்துக்கொண்டு மத்திய அரசு இந்த தரவரிசை பட்டியலை வெளியிட்டிருக்கிறது. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியின் கீழ் இந்த 5 முக்கிய சீர்திருத்தங்களிலுமே எவ்வித முன்னேற்றமும் இல்லை என்பதைப் பார்க்கும் போது கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்றது ஆட்சியல்ல.

வெறும் காட்சி. அதுவும் காணொலிக் காட்சி என்பது நிரூபணம் ஆகிவிட்டது. மேற்கண்ட தொழில் செயல் திட்ட சீர்திருத்தங்களை நிறைவேற்றி 90 முதல் 100 சதவீதம் மதிப்பெண்கள் பெற்ற மாநிலங்கள் தொழில் வளர்ச்சிக்கு தலைமை ஏற்கும் மாநிலங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது. 70 முதல் 90 மதிப்பெண்கள் பெற்ற மாநிலங்கள் தொழில் வளர்ச்சிக்கு தலைமை ஏற்க ஆர்வத்துடன் முன்வரும் மாநிலங்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த இரு பட்டியலிலுமே தமிழகம் இடம்பெறவில்லை என்பது கவலையளிப்பதோடு மட்டுமின்றி, மன வேதனையளிப்பதாகவும் இருக்கிறது.

மத்திய அரசின் அறிக்கைப்படி இன்றைக்கு அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் தொழில் வளர்ச்சிக்கு தலைமை தாங்கும் மாநிலமாகவும் இல்லை; தொழில் வளர்ச்சிக்கு தலைமை ஏற்பதற்கு ஆர்வத்துடன் முன்னேறும் மாநிலமாகவும் இல்லை என்பது அ.தி.மு.க.வின் நிர்வாக சீர்கேட்டை தோலுரித்து காட்டியிருக்கிறது.

கடந்த முறை ஆட்சியிலிருந்த போது “வெற்று அறிவிப்புகளை” வெளியிட்டு, சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் தொழில் வளர்ச்சி குறித்து முரட்டு பொய்களை கட்டவிழ்த்துவிட்டு 5 ஆண்டு காலத்தை கடத்தியது அ.தி.மு.க. ஆட்சி. “தொலை நோக்குத் திட்டம்-2023” “புதிய தொழில் கொள்கை-2014” போன்ற பகட்டான அறிவிப்புகளை வெளியிட்டார்களே தவிர அதற்கான செயல்திட்டங்களை முன்னெடுத்துச்செல்லவில்லை. “உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2015” என்று ஒரு ஆடம்பர மாநாட்டை நடத்தி அரசு கஜானாவை காலி பண்ணும் அளவிற்கு விளம் பரங்கள் செய்து கொண்டார்களே தவிர, அந்த மாநாட்டால் எந்த பலனும் கிடைக்கவில்லை.

தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கோ அல்லது வேலை வாய்ப்பிற்கோ உதவ ஒரு துரும்பை கூட அந்த மாநாடு எடுத்து போடவில்லை. அந்த மாநாட்டில் 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டதாகவும், 2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி ரூபாய் முதலீடு செய்ய தொழில் முனைவோர் முன் வந்ததாகவும் கூறினார்கள். அந்த முதலீடுகளை கூட அ.தி.மு.க. அரசால் பெறமுடியவில்லை என்பது வெட்கக்கேடான செயல்.

நிதிநிலை அறிக்கை மீதான விவாதம், கவர்னர் உரையின் மீதான விவாதம் போன்றவற்றில் இது பற்றியெல்லாம் எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் நானும், மற்ற சட்டமன்ற உறுப்பினர்களும் தி.மு.க.வின் சார்பில் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பிய போதெல்லாம் அ.தி.மு.க. அமைச்சர்கள் அடாவடி செய்தார்கள். முதல்-அமைச்சர் ஜெயலலிதாவோ ஆவேசப்பட்டார். ஆனால் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி இல்லை; தொழில் முதலீட்டாளர்கள் வேறு மாநிலங்களுக்கு செல்கிறார்கள்; தொழில் தொடங்க முன் வருவோருக்கும் உரிய நேரத்தில் அனுமதி வழங்குவதில்லை என்றெல்லாம் தி.மு.க. சார்பில் இதுவரை எழுப்பப்பட்டு வந்த அனைத்து குற்றச்சாட்டுகளும் அக்மார்க் உண்மை என்பது இப்போது மத்திய அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையின் வாயிலாக நிரூபிக்கப்பட்டுவிட்டது.

தமிழகம் “முதலீட்டுக்கு உகந்த மாநிலம்” என்றும், “தொழில் வளர்ச்சியில் முதன்மை மாநிலமாகிவிட்டது” என்றும் அ.தி.மு.க. அமைச்சர்களும், முதல்- அமைச்சரும் செய்து வந்து தவறான பிரசாரம் மத்திய அரசின் இந்த ஆய்வறிக்கையின் மூலம் தவிடுபொடியாகி விட்டது. தொழில் வளர்ச்சியும், பொருளாதார வளர்ச்சியும் ஒரு மாநிலத்தின் இரு கண்கள் போன்றவை என்பதை அனைவரும் அறிவர். ஆகவே, இனியாவது தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு ஏற்ற சூழலை உருவாக்க அ.தி.மு.க. ஆட்சி தீவிரமாக செயல்பட வேண்டும்.

அமைச்சரவை கூட்டத்திற்கு தலைமை தாங்கும் பொறுப்பு நிதியமைச்சராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், தொழில் தொடங்குவதற்கு ஏற்ற சீர்திருத்தங்களை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை அவர் எடுக்க வேண்டும். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்டதாக சொல்லப்பட்ட 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்களையாவது உடனடியாக நிறைவேற்றி, தமிழகம் தொழில் துறையில் முன்னேறிய மாநிலமாக மாறவும், பொருளாதார வளர்ச்சியில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக பீடு நடை போடவும் ஆக்கப்பூர்வமான முயற்சிகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.