மக்கள் நலக்கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை- வைகோ

280 0

201610221948001339_vaiko-condemned-for-tamil-students-killed-in-sri-lanka_secvpfமக்கள் நலக்கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்று வைகோ கூறினார்.ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ மதுரை செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:-
மக்கள் நலக்கூட்டணி சார்பில் 4 கட்சிகளும் கலந்து பேசி தான் கடந்த மாதம் 22-ந்தேதி 3 தொகுதிகளுக்கான தேர்தலை புறக்கணிப்பது என அறிவித்தோம். இதனை கூட்டணியில் உள்ள கட்சிகளின் கருத்துகளை கேட்டு தான் அறிவித்தேன். தன்னிச்சையாக அறிவித்ததாக சில பத்திரிகைகளில் செய்தி வந்ததை கூட்டணியில் உள்ள கட்சிகள் மறுத்துள்ளன.

போட்டியிடுவதில்லை என்பதற்கும், புறக்கணிக்கிறோம் என்பதற்கும் வேறுபாடு உள்ளது. யாருக்கும் ஆதரவு தருவது இல்லை என்பது தான் எங்களின் நிலைப்பாடு. எனவே தமிழகத்தில் எந்த ஒரு கட்சிக்கும் எங்கள் ஆதரவு கிடையாது.

புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனித்து இயங்குகிறது. தமிழகத்தில் உள்ள முடிவுகளை பின்பற்றுவதில்லை என அவர்கள் ஏற்கனவே அறிவித்து உள்ளனர். அதன் அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு அளித்துள்ளது. எனவே மக்கள் நலக்கூட்டணியில் எந்தவிதமான குழப்பமும் இல்லை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, காங்கிரசை ஆதரிக்காது என்று கூறி உள்ளது. அதே சமயம் புதுச்சேரி தேர்தலை ம.தி.மு.க., புறக்கணிக்கிறது.

மக்கள் நல கூட்டணி நீண்ட நாள் நீடிக்காது என்று காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசர் கூறிய கருத்துகளுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.