சிங்கள பௌத்த ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சி – சீனித்தம்பி யோகேஸ்வரன்

384 0

img_3915இறக்காமம் – மாணிக்கமடு பகுதியில் புத்த சிலை வைக்கப்பட்ட செயலானது வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை முடக்கிக்கொண்டு சிங்கள பௌத்த ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சியாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

அம்பாறை – இறக்காமம் மாணிக்கமடு கிராத்தில் திடீரென புத்த சிலை வைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

நாட்டில் தற்போது நல்லாட்சி நடைபெறுகிறது என புதிய அரசாங்கம் கூறிக்கொண்டிருக்கிறது.

ஆனால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் சிங்கள பௌத்த மக்கள் குடியிருக்காத பகுதிகளில் திட்டமிட்ட முறையில் புத்தர் சிலைகளை நிறுவுவதற்கு இடமளித்திருப்பது தமிழ், முஸ்லிம் மக்களிடையே அரசாங்கத்தின் மீது சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.

தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் இறக்காமம் – மாணிக்கமடு பகுதியில் புத்தர் சிலை நிறுவப்பட்டதைத் தொடந்து அங்குள்ள மக்கள் மத்தியில் அச்சநிலையைத் தோற்றுவித்துள்ளது.

ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைப் பெற்றுத்தருவார் என்ற நம்பிக்கையில் தமிழ் மக்கள் வாக்களித்தனர்.

அவர்களின் நம்பிக்கையை நிறைவேற்ற வேண்டு. புத்தசிலை வைக்கப்பட்டதன் பின்னணியில் யார் செயற்படுகிறார்கள் என்பதை உடனடியாக ஆராய்ந்து மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.