முல்லைத்தீவு முத்தையன்கட்டு குளத்தின் புனரமைப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பொறியியலாளர் எஸ்.சிறிஸ்கந்தராஜா அவர்கள் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு முத்தையன்கட்டுக்குளத்தின் புனரமைப்பு பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இவ்வாண்டு காலபோக செய்கை தவிர சிறுபோக செய்கைக்கான நீர்தேக்கமுடியாத நிலை ஏற்படுமோ என விவசாயிகள் சந்தேகம் வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இதில் விவசாயிகள் அச்சமடையவேண்டிய தேவை எதுவும் இல்லை என்றும் தெரிவித்த பிரதி நீர்ப்பாசனப்பணிப்பாளர் உலக வங்கியின் நிதியுதவியுடன் 600 மில்லியன் ரூபா செலவில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் கீழ் உள்ள அணைப்பாதுகாப்பு மற்றும் நீர்வளங்கள் திட்டமிடல் கருத்திட்டத்தின் கீழ் முத்தையன்கட்டுக்குளத்தின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
தற்போது குளத்தின் அணைக்கட்டு புனரமைப்புப்பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றுள்ளன.அத்துடன் குளத்தின் நீரைத்தேக்கக் கூடிய நிலையில் உள்ளது. ஏனைய வேலைகள் தொடர்ந்து இடம்பெறுகின்றன.
ஆகவே விவசாயிகள் எந்தவித சந்தேகமும் கொள்ளவேண்டிய தேவையும் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.