நாட்டில் சகல காவல்துறை நிலையங்களிலும் தமிழ் மொழியில் விசாரணை செய்வதற்கும் தமிழ் மொழியில் முறைப்பாட்டினைப் பதிவு செய்வதற்கும் நடவடிக்கை எடுப்பேன் என காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர உறுதியளித்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்று செவ்வாய்க்கிழமை காவல்துறைத் திணைக்களத்தின் 150 ஆவது ஆண்டு நினைவுதின விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
இன்று நாட்டில், தேசியவாதம், இனவாதம், பிரிவினைவாதம் என்று எதுவுமே இல்லை. வடக்குக் கிழக்கு மக்கள் உட்பட ஏனைய மாகாண மக்களும் இதனையே விரும்பினர்.
நாட்டில் இன்று கடுமையான சட்டம், ஒழுங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறை திணைக்களம் நாளுக்குநாள் பலத்த சவால்களை எதிர்நோக்குகின்றது.
நாம் உங்களுக்காக அச்சவால்களுக்கு மிக எளிமையான, உணர்வுபூர்வமான, நெகிழ்வான. நேரடியான சில சமயங்களில் வெளிப்படையான முறையில் முகங்கொடுத்து வருகின்றோம்.
உங்களையும் உங்களுடைய சொத்துகளையும் பாதுகாப்பது எங்களுடைய கடமையாகும். அதன் மூலம் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதும் எமது கடமையாகும்.
மக்களின் வாழ்க்கையில் தொடர்ந்தும் நிலைத்திருக்கக்கூடிய மிகவும் அவசியமான விடயங்களை அறிமுகப்படுத்தவிருக்கின்றேன்.
அதற்காக வடமாகாணம், கிழக்குமாகாணம், மத்திய மாகாணம், ஊவா மாகாணம், மேல் மாகாணம், சப்ரகமுவ மாகாணம் போன்ற மாகாணங்களில் எமது திட்டத்தினை அறிமுகப்படுத்த தீர்மானித்திருக்கின்றேன்.
இந்த ஆண்டில் 70வீதமான குற்றச் செயல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அவையனைத்தும் இந்த ஆண்டின் இறுதிக்குள் முற்றாக தீர்த்துவைக்கப்படும்.
அத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஒவ்வொருநாளும் சிரேஷ்ட காவல்துறை அதிபர்கள், சிரேஷ்ட பிரதி காவல்துறை அதிபர்கள், தேவைப்படுமிடத்தில் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்களையும் கண்காணித்து உரிய பணிப்புரைகளை வழங்கி வருகின்றேன்.
வரும் நாட்களில் காவல் நிலையங்களின் எண்ணிக்கை 600ஆக உயர்த்தப்படவிருக்கின்றன. தமிழ் பேசும் காவல்துறையினரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதன் காரணமாக 25சதவீதம் தமிழ் பேசும் பொலிஸாரை சேவையில் இணைத்துக்கொள்ள திட்டமிட்டிருக்கின்றோம்.
அவர்கள் மொழி உதவிப் பிரிவில் இணைத்துக்கொள்ளப்படவிருக்கின்றனர். வடக்குகிழக்கு, மலையகத்திலுள்ள தமிழ் பேசும் இளைஞர் யுவதிகள் ஆங்கிலம் தெரிந்தவர்கள் காவல்துறை தலைமையகத்தில் அமைக்கப்படவிருக்கின்ற மொழி உதவிப் பிரிவிற்கு உதவிகளை வழங்க முடியும்.
பொது மக்கள் காவல் நிலையத்திற்கு வருகை தரும்போது தமக்குத் தெரிந்த மொழியில் உரையாடுவதற்கு மொழி உதவிப் பிரிவு உதவி புரியும்.
தமக்குத் தெரிந்த மொழியில் தொலைபேசி மூலமாகவும் குறுஞ்செய்திகள் மூலமாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் காவல்துறையினருடன் தொடர்புகொண்டு அதே மொழியில் உரிய பதில்களையும் உதவிகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.
இளைஞர்கள், முதியவர்கள், பாடசாலை மாணவர்கள், அரச பணியாளர்கள், அரசசார்பற்ற நிறுவன ஊழியர்கள், அரச அதிபர்கள், கிராம சேவையாளர்கள் அனைவரும் நாம் பொதுமக்களை இலகுவாக சென்றடைய உதவி புரிய வேண்டும்.
உங்களுடைய செயற்பாடுகள் நாங்கள் வினைத்திறனுடன் கடமையாற்றுவதற்கு உதவியாக இருக்க வேண்டும். காவல்துறையினர் உங்களுக்காகவே கடமையாற்றுகின்றனர்.