இலங்கை பந்துவீச்சாளர்கள் திணறல்!

343 0

k-9-640x381இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 373 ஓட்டங்களை குவித்துள்ளது.

இலங்கை- ஜிம்பாப்வே அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஹாரரேவில் நடந்து வருகிறது.

இதில் இலங்கை அணி உபுல் தரங்கா (110), குசால் பெரேரா (110) ஆகியோரின் அபார சதத்தால் முதல் இன்னிங்சில் 537 ஓட்டங்களை குவித்தது.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே அணி நேற்றைய ஆட்டநேர முடிவில் 1 விக்கெட்டுக்கு 88 ஓட்டங்கள் குவித்திருந்தது.

இன்று 3வது நாள் ஆட்டம் தொடங்கியது. இதில் தொடர்ந்து விளையாடிய ஜிம்பாப்வே அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்துடன் இருந்தது.

அந்த அணி 139 ஓட்டஙகளுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தவித்து வந்தது. அப்போது ஜோடி சேர்ந்த அணித்தலைவர் கிரிமர், பீட்டர் மோர் சிறப்பாக செயல்பட்டனர்.

நங்கூரம் போல் நிலைத்து நின்று விக்கெட் சரிவை தடுத்தனர். அவர்களை இலங்கை பந்துவீச்சாளர்கள் பிரிக்க முயன்றும் பலன் அளிக்கவில்லை.

ஒரு வழியாக பீட்டர் மோர் 79 ஓட்டங்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 7 விக்கெட்டுக்கு 132 ஓட்டங்களை சேர்த்தது. பின்னர் வந்த திரிபனோ 42 ஓட்டங்கள் எடுத்தார்.

கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஆடிய அணித்தலைவர் கிரிமர் 102 ஓட்டங்கள் எடுத்து அசத்தினார். இது அவருக்கு முதல் சதமாகும். இதனால் முதல் இன்னிங்சில் ஜிம்பாப்வே அணி 373 ஓட்டங்கள் குவித்து 164 ஓட்டங்கள் பின்தங்கி உள்ளது.

தற்போது இலங்கை அணி தனது 2வது இன்னிங்சை விளையாடி வருகிறது.3வது நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை விக்கெட் இழப்பின்றி 5 ஓட்டங்கள் பெற்றுள்ளது. திமுத் (1), குசால் சில்வா (3) களத்தில் உள்ளனர்.