பாகிஸ்தான் பள்ளிக்கூடத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் முயற்சிக்கு ஈடுபட்டபோது போலீசாரை கண்டதும் தப்பி ஓடிவிட்டனர்.
பாகிஸ்தானில் இயங்கி வரும் பல்வேறு தீவிரவாத அமைப்புகள் அப்பாவி மக்கள் மீதும், பள்ளி குழந்தைகள் மீதும் அடிக்கடி தாக்குதல் நடத்தி அதிகப்படியான உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. அந்தவகையில் பெஷாவரில் உள்ள ராணுவ பள்ளிக்கூடம் ஒன்றில் தெக்ரிக்-இ-தலீபான் தீவிரவாதிகள் கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 14-ந் தேதி நடத்திய கொடூர தாக்குதலில் 148 மாணவ-மாணவிகள் கொல்லப்பட்டது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதைப்போன்ற ஒரு பயங்கர தாக்குதலை அரங்கேற்ற தீவிரவாதிகள் நேற்றும் முயற்சித்தனர். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்துக்கு உட்பட்ட பகவல்நகரில் இயங்கி வரும் பள்ளிக்கூடம் ஒன்றுக்கு பயங்கர ஆயுதங்களுடன் 2 தீவிரவாதிகள் வந்தனர். பின்னர் அவர்கள் துப்பாக்கியால் சுட்டவாறே பள்ளிக்குள் நுழைய முயன்றனர். இதில் பள்ளிக்கூட காவலாளி ஒருவர் காயமடைந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் ஏராளமான படையினருடன் உடனே அங்கு விரைந்தனர். அவர்கள் தீவிரவாதிகளை சுற்றிவளைக்க முயன்றனர். ஆனால் போலீசாரை கண்டதும் தீவிரவாதிகள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் பத்திரமாக பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.