சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு

289 0

201610311626148123_salem-government-hospital-kidnap-baby-rescue_secvpfசேலம் அரசு ஆஸ்பத்திரியில் கடத்தப்பட்ட குழந்தை மீட்கப்பட்டது. குழந்தை இல்லாத ஏக்கத்தில் தூக்கி சென்றதாக கைதான இளம்பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.சேலம் மாவட்டம் நீர்முள்ளிக்குட்டை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 30). லாரி டிரைவர். இவரது மனைவி இந்து (வயது 24). இந்த தம்பதிக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் மீண்டும் கர்ப்பமான இந்துவுக்கு கடந்த 24-ந்தேதி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ஆண்குழந்தை பிறந்தது. பிரசவ வார்டில் இருந்த இந்த குழந்தையை 26-ந்தேதி மர்மபெண் ஒருவர் கடத்தி சென்று விட்டார். குழந்தையை காணாத இந்து அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தில் தேடினார்.

குழந்தை குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் சேலம் அரசு ஆஸ்பத்திரி போலீசில் வெங்கடேஷ் புகார் கொடுத்தார். உடனே குழந்தையை திருடிய இளம்பெண்ணை பிடிக்க போலீஸ் கமி‌ஷனர் சஞ்சய் குமார் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

அதில், துணை கமி‌ஷனர் ஜோர்ஜ் ஜி.ஜார்ஜ் தலைமையில் டவுன் உதவி கமி‌ஷனர் ரவீந்திரன், இன்ஸ்பெக்டர்கள் வின்சென்ட், ரவீந்திரன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். அந்த தனிப்படையினர் குழந்தையை தீவிரமாக தேடி வந்தனர்.

மேலும் அரசு ஆஸ்பத்திரி கேமிராவில் பதிவாகி இருந்த குழந்தையை கடத்திய பெண்ணின் படத்தை போஸ்டராக சேலம் மாவட்டம் முழுவதும் ஒட்டியும் இளம்பெண்ணை தேடினர்.

இதற்கிடையே குழந்தையை கண்டுபிடித்து தர கேட்டு குழந்தையின் பெற்றோரும், உறவினர்களும் கலெக்டர் அலுவலகம் வந்து முற்றுகையிட்டனர். அவர்களிடம் குழந்தையை விரைவில் கண்டு பிடித்து விடுவோம் என்று போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் மாயமான குழந்தையை தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளியை அடுத்த கரகூரை சேர்ந்த இளம்பெண் வெண்ணிலா (வயது 22) என்பவர் கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் குழந்தையை மீட்டனர். வெண்ணிலாவையும் கைது செய்தனர்.

மீட்கப்பட்ட குழந்தையை நேற்று மாலை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து அதன் தாய் இந்துவிடம் துணை கமி‌ஷனர் ஜார்ஜ் ஜி. ஜார்ஜ் ஒப்படைத்தார்.  அப்போது இந்து குழந்தையை கட்டி தழுவி உச்சி முகர்ந்து முத்தமிட்டு ஆனந்த கண்ணீர் வடித்தார். பின்னர் அவரும், அவரது கணவரும் தனிப்படை போலீசாருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத விரக்தியில் வெண்ணிலா இருந்தார். உறவினர்களை சமாளிக்க கர்ப்பிணி போல நடித்து ஏமாற்றிய வெண்ணிலா குழந்தையை கடத்தியுள்ளார். தற்போது போலீசாரிடம் சிக்கிய அவர் கடும் மன உளைச்சலில் உள்ளார்.

இதையடுத்து சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள பெண்கள் காப்பகத்தில் அவரை போலீசார் சேர்த்தனர். அங்கு வெண்ணிலாவிற்கு சில நாட்கள் கவுன்சிலிங் கொடுக்க போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் சிலர் கூறும் போது, வெண்ணிலா திட்டமிட்டு குழந்தையை கடத்தி செல்லவில்லை. குழந்தை இல்லாத ஏக்கத்தில் அவர் குழந்தையை எடுத்து சென்றுள்ளார். குழந்தையை அவர் தாய் போல் கவனித்து வந்துள்ளார்.

இதனால் அவரை கைது செய்து சிறையில் அடைக்காமல் அவருக்கு கவுன்சிலிங் கொடுத்து அவர் செய்த தவறை எடுத்து கூற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கவுன்சிலிங் முடிந்த பின்னர் வெண்ணிலா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கைதான வெண்ணிலா போலீசாரிடம் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார். இதில் அவர் கூறி இருப்பதாவது:-

எனது சொந்த ஊர் மாரண்டஅள்ளி அருகில் உள்ள கரகூர். எனக்கும், சேலத்தை அடுத்த சந்தியூரை சேர்ந்த சதீஸ்குமார் என்பவருக்கும் திருமணம் ஆனது. கடந்த 3 வருடமாக எனக்கு குழந்தை இல்லை. இதனால் எனக்கும், எனது கணவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

உறவினர்களும் என்னை மலடி என கூறியதால் வாழ்க்கையில் வெறுப்படைந்த நான் கர்ப்பமானது போல் நாடகம் ஆட முடிவு செய்து கணவரிடம் கர்ப்பம் அடைந்துள்ளதாக கூறினேன். அவரும் நம்பி விட்டார்.

கடந்த 6 மாதமாக வயிற்றில் துணிகளை சுற்றிக்கொண்டு கர்ப்பமாக இருப்பது போல் நடித்து வந்தேன். அவ்வப்போது மல்லூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று டாக்டர்களை சந்திப்பதாக கூறினேன்.

இந்த நிலையில் எனக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது ஆஸ்பத்திரிக்கு போய் காண்பித்து விட்டு வந்து விடுகிறேன் என என் கணவரிடம் கூறிவிட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தேன்.

அப்போது என்னை சந்தித்த பெண்களிடம், வயிற்று வலி அதிகமாக இருக்கிறது. இதற்கு ஊசி போட்டு செல்ல வந்தேன் என கூறினேன். பிறகு பிரசவ வார்டுக்கு சென்று நர்ஸ்களை பார்க்க வந்தது போல் நின்று கொண்டிருந்தேன்.

அப்போது பிரசவ வார்டுக்கு மதிய சாப்பாடு எடுத்து வந்தனர். இதனால் சாப்பாடு வாங்க பிரசவ வார்டில் இருந்தவர்கள் வெளியில் வந்தனர். அந்த நேரத்தில் இந்துவிடம் சென்று அவருக்கு தெரியாமல் குழந்தையை தூக்கி வந்து விட்டேன்.

பின்னர் சந்தியூர் சென்று எனது கணவரிடம் குழந்தையை காண்பித்தேன். ஆனால் எனது கணவர் சந்தோ‌ஷம் அடையாமல் என் மீது சந்தேகம் அடைந்தார். காலையில் ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டு உடனே எப்படி குழந்தை பிறந்தது என கேட்டு என்னை திட்டினார்.

இதனால் எங்களிடையே தகராறு ஏற்பட்டது. அக்கம் பக்கம் இருந்த சிலர் அங்கு வந்து சமாதானம் செய்தனர். அப்போதும் எனது கணவர் சமாதானம் அடையாமல் குழந்தையை கொண்டு போய் கொடுத்து விட்டு வந்து விடு என கூறினார்.

இதனால் நான் குழந்தையை தூக்கி கொண்டு சேலம் வந்தேன். மீண்டும் ஆஸ்பத்திரியில் குழந்தையை கொடுத்து விட நினைத்து வந்தேன். ஆனால் குழந்தையை கொடுத்தால் என்னை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விடுவார்கள் என பயந்து போய் எனது சொந்த ஊருக்கு சென்று விட்டேன்.

அங்கு யாருக்கும் சந்தேகம் வராதபடி நடந்து கொண்டேன். குழந்தையுடன் நான் வந்ததால் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நானும் குழந்தையை தாய் போல் கவனித்து கொண்டேன். ஆனால் போலீசார் நான் இருக்கும் இடத்தை அறிந்து வந்து என்னை கைது செய்து விட்டனர் என்றார்.

அப்போது போலீசார் நான் செய்தது தவறு என கூறி எனக்கு அறிவுரையும் வழங்கினர். இதனால் அவர்களிடம் குழந்தையை ஒப்படைத்தேன். குழந்தையை நான் பெற்றெடுக்கவில்லை என்றாலும் அது என் குழந்தை போல் பார்த்து கொண்டேன். அந்த குழந்தையை பிரிந்து நிச்சயம் என்னால் இருக்க முடியாது. நான் வேண்டும் என்றே குழந்தையை கடத்தவில்லை. குழந்தை இல்லாத ஏக்கத்தில் குழந்தையை தூக்கி சென்று விட்டேன். இது தவறு என இப்போது தெரிந்து கொண்டேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.