காவிரி பிரச்சினையில் மத்திய அரசை கண்டித்து கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம்

304 0

201611010952259831_agricultural-union-announced-governor-house-siege-battles_secvpfகாவிரி பிரச்சினையில் மத்திய அரசை கண்டித்து சென்னை கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் அறிவித்து உள்ளது.

தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தலைவர் பி.கே.தெய்வசிகாமணி ஈரோட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி பாசனத்தில் கடந்த 5 ஆண்டுகளாக குறுவை பயிரிட முடியவில்லை. இந்த ஆண்டு குறுவை, சம்பா ஆகிய 2 பாசனங்களும் சாகுபடி செய்ய முடியவில்லை. தமிழகத்திற்கான காவிரி உரிமையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்த பிறகும் மத்திய அரசு கர்நாடக மாநில அரசுடன் சேர்ந்து தமிழக விவசாயிகளை வஞ்சித்து வருகிறது. தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் கடந்த 6-ந் தேதி சென்னையில் அனைத்துகட்சி கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி கடந்த 17, 18-ந் தேதிகளில் பல்வேறு இடங்களில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்தநிலையில் தமிழகத்திற்கு தொடர்ந்து துரோகம் செய்து வரும் மத்திய அரசை கண்டித்து அடுத்தக்கட்ட நடவடிக்கையாக மாபெரும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி சென்னையில் காவிரி உரிமை மீட்பு ஊர்வலம் நடத்தப்பட உள்ளது. இதில் 10 லட்சம் பேர் ஊர்வலமாக சென்று சென்னை கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட உள்ளது. சட்டமன்ற இடைத்தேர்தல் முடிந்த பிறகு போராட்ட தேதி அறிவிக்கப்படும்.

போராட்டம் தொடர்பாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அனைத்து தரப்பினர் ஆதரவையும் திரட்ட உள்ளோம். முதல்கட்டமாக 2-ந் தேதி (நாளை) முதல் 3 நாட்கள் சென்னையில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிற அமைப்பினர்களையும் சந்தித்து ஆதரவு கேட்க உள்ளோம்.

தமிழ்நாட்டில் கடுமையான வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. மேலும், விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே தமிழகத்தை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலமாக அறிவித்து வறட்சி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வறட்சி காலத்தில் வங்கிகள் பயிர்க்கடன் வசூல் செய்வதை நிறுத்தி வைக்கவும், குறுகிய கால கடன்களை நீண்ட கால கடனாக மாற்றி அமைக்கவும், புதிய கடன்களை வழங்கவும் வங்கி மேலாளர்களுக்கு ரிசர்வ் வங்கி அதிகாரம் அளித்து உள்ளது. எனவே கடன் வசூலை நிறுத்தி வைத்து, குறுகிய கால கடனை நீண்ட கால கடனாக மாற்றி அறிவிக்க வேண்டும்.

வருங்காலத்தில் வறட்சி ஏற்படாமல் தடுக்க ஏரி, குளங்களை துர்வாரி மழை தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் வறட்சியால் மிகவும் சிரமப்பட்டு வருவதால் கரும்பு ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவை தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது இந்திய மஞ்சள் விவசாயிகள் சங்க மாநில தலைவர் பி.காசியண்ணன், செயற்குழு உறுப்பினர் பூபதிசுந்தரம், விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில செயலாளர் கே.ஏ.சுப்பிரமணி ஆகியோர் உடன் இருந்தனர்.