கொடைக்கானல் மலையில் கன மழை பெய்ததால் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து 8 கி.மீ தூரத்தில் கும்பக்கரை அருவி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள இந்த அருவிக்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் வரத்து எப்போதும் இருக்கும்.
இந்த அருவிக்கு கொடைக்கானல் மலையில் உள்ள அடுக்கம் பகுதியில் கன மழை பெய்தால் வெள்ளப் பெருக்கு இருக்கும். கடந்த 2 நாட்களாக கொடைக்கானல் மலையில் கனமழை பெய்து வருகிறது. எனவே தற்போது கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
எனவே சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று காலையும் தண்ணீர் வரத்து அதிகரித்துக் கொண்டே இருந்தது. இன்று 2-வது நாளாக கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.