ரேடாரின் கண்ணில் மண்ணை தூவி பறக்கும் போர் விமானம்

282 0

201611011009157326_china-debuts-j-20-stealth-fighter-in-flypast-at-zhuhai_secvpfஅதிநவீன தொழில்நுட்பத்துடன் எதிரி நாட்டின் ரேடாரில் சிக்காமல் பறந்து சென்று தாக்குதல் நடத்தும் ‘செங்டு J-20’ ரக போர் விமானத்தை சீனா இன்று அறிமுகப்படுத்தியது.

காலமாற்றத்துக்கு தக்கவகையில் அனைத்து தொழிநுட்பங்களும் வளர்ச்சியடைந்து வருகின்றன. நாகரிக உலகின் ஐந்தாம் தலைமுறைக்கேற்ப ராணுவ தளவாடங்கள் மற்றும் போர்விமானங்களின் தரத்தையும் நாளுக்குநாள் உயர்த்துவதில் உலகநாடுகள் அதிக அக்கறை காட்டி வருகின்றன.

குறிப்பாக, பொருளாதார பலத்துடன் வல்லரசாக திகழ வேண்டும் என்ற துடிப்பில் இருக்கும் அமெரிக்கா, ரஷியா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்கள் நாட்டின் ராணுவத்தில் உள்ள முப்படைகளையும் நவீனமயமாக்குவதில் தீவிரமாக உள்ளன.

இதில் ஒருகட்டமாக, சீனாவின் விமானப்படைக்காக தயாரிக்கப்பட்ட ‘செங்டு J-20’ என்ற அதிநவீன போர்விமானம் உலகநாடுகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. கடந்த ஆண்டு ரகசியமாக சோதனை வெள்ளோட்டம் நடத்தப்பட்ட இந்த போர்விமானம் இரட்டை என்ஜின்களுடன் மிக அதிகமான உயரத்தில் பறந்து, குண்டுகளைவீசி தாக்குதல்களை நடத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, மணிக்கு 2,100 கிலோ மீட்டர் வேகத்தில் எதிரி நாட்டின் ரேடாரில் சிக்காமல் பறந்து சென்று தாக்குதல் நடத்தும் வகையில் ‘செங்டு J-20’ ரக போர் விமானம் உருவாக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஸுஹாய் நகரில் நடைபெற்றுவரும் விமான விற்பனை கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தெற்கு சீனாவில் இந்த விமானத்தின் சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் தயாரித்துவரும் அதிநவீன போர்விமானமான ‘F-22 ரப்ட்டர்’ என்ற விமானத்துக்கு சவாலாக சீனாவின் இந்த ‘செங்டு J-20’ போர்விமானம் அமையும் என போர்க்கலை வல்லுனர்கள் கருதுகின்றனர்.