பணம் தூய்மையாக்கல் சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட விசாரணை நிறைவடைந்துள்ளதாக பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு கோட்டை நீதவான் நீதிமன்றம் அறிவித்தது.
கடந்த காலங்களின் போது ரகர் விளையாட்டினை அபிவிருத்தி செய்வதாக கூறி கிரிஷ் என்ற இந்திய நிறுவனத்திடம் 70 மில்லியன் ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு அதனை மோசடி செய்தமை தொடர்பிலான விசாரணையே நிறைவு செய்து நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் மார்ச் மாதம் 20ஆம் திகதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிமன்றம் அறிவித்திருந்தன.
வழக்கு நிறைவடைந்தன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்த நாமல் ராஜபக்ச, முறி மோசடிகளுக்கு தொடர்புடைய குற்றவாளிகளின் வெளிநாட்டு பயணங்களை தடை செய்வதற்கான நடவடிக்கையினை அரசாங்கம் வேண்டும் என்றே நிராகரித்து வருகின்றது.
தற்போது குற்றம் சுமத்தப்பட்டுள்ள கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வெளிநாட்டு பயணங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. எனது வெளிநாட்டு பயணங்களும் தடை செய்யப்பட்டுள்ளது.
எனினும் இலங்கை வரலாற்றில் பாரிய பண மோசடி மேற்கொண்டமை தொடர்பில் கோப் குழுவினால் குற்றவாளி என அர்ஜுன் மகேந்திரன் மற்றும் அவரது மருமகனின் வெளிநாட்டு பயணங்களை தடை செய்வதற்கு அரசாங்கம் இது வரை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இதுவா நல்லாட்சி அரசாங்கம்? என நாமல் ராஜபக்ச கேள்வியெழுப்பியுள்ளார்.