இராணுவ முகாம் பிரதேசத்தில் நடந்த அகழ்வில் மனித எச்சங்கள் என சந்தேகிக்கும் தடையங்கள் மீட்பு

296 0

92161303_mpபோர்க் காலத்தில்  கைதானவர்கள் கொண்டு செல்லப்பட்டு காணாமல் போனதாக பல்வேறு தரப்பினராலும் குற்றஞ்சாட்டப்பட்டுவந்த  மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனை ராணுவ முகாமுக்கு பின்புறமாகவுள்ள காணியில் நடைபெற்ற அகழ்வு பணியின் போது, மனித எச்சங்கள் என சந்தேகிக்கப்படும் தடயங்கள் காணப்பட்டதையடுத்து அகழ்வு பணிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன.

குறித்த முகாம்பிரதேசம் 190 ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து இலங்கை அரச படைகள் வசம் இருந்ததாகக் கூறப்படுகின்றது.
1990-ஆம் ஆண்டில் அரசாங்க பள்ளிக் கூட வளாகத்தையும் அதனை அண்மித்த மக்கள் குடியிருப்புகளையும் உள்ளடக்கியதாக முறக்கொட்டான்சேனை ராணுவ முகாம் அமைக்கப்பட்டது.
மறைந்த ஜனாதிபதி ஆர். பிரேமதாஸ தலைமையிலான அரசாங்கத்திற்கும், விடுதலைப்புலிகளுக்குமிடையே 1989-இல் போர் நிறுத்த உடன்படிக்கையொன்று கையெழுத்தானது.
1990-இல் அந்த உடன்படிக்கை முறிவடைந்ததையடுத்து கிழக்கு மாகாணத்தில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக அவ்வேளை பாரிய ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
1990-ஆம் ஆண்டு தொடக்கத்தில் ராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த மக்கள் குடியிருப்புகளில் ஒரு தொகுதி 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் விடுவிக்கப்பட்டுள்ளது
போருக்கு பின்னர் அக்காணிகள் விடுவிக்கப்பட்டு மீள்குடியேற்றத்திற்கும் அனுமதியளிக்கப்பட்ட நிலையில் புனர்வாழ்வு மற்றும் மீள் குடியேற்ற அமைச்சின் உதவியில் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
1990-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் ராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த தங்கள் காணி 2014-ஆ ம் ஆண்டு ஜுலை மாதத்தில் மீளக் கையளிக்கப்பட்டதாக காணி உரிமையாளரான வானதி உதயகுமார் தெரிவித்தார்.
கழிப்பறை கட்டுவதற்காக குழி வெட்டிய போதே மனித எச்சங்கள் என சந்தேகிக்கப்படும் தடயங்கள் காணப்பட்டதாகவும் அவர் கூறினார்.
சம்பவத்தை மனித உரிமைகள் ஆணையகத்தின் அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோரும் இன்று (திங்கட்கிழமை) சென்று பார்வையிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஏறாவூர் போலீஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.