பர்கினோ பசோ நாட்டின் தங்கச்சுரங்க ஊழியர்கள் மீது மர்மநபர்கள் நடத்திய தாக்குதலில் 37 பேர் உயிரிழந்தனர்.
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்று பர்கினோ பசோ. அந்நாட்டின் போன்கியுவ் என்ற இடத்தில் கனடா நாட்டின் நிறுவனத்திற்கு சொந்தமான தங்கச்சுரங்கம் அமைந்துள்ளது.
இந்நிலையில், அந்த தங்கச்சுரங்கத்தில் வேலை செய்யும் பணியாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று வழக்கம்போல 5 பஸ்களில் தங்கள் நிறுவனத்திற்கு சென்றுகொண்டிருந்தனர். ஊழியர்களை ஏற்றி சென்ற பஸ்சுக்கு உள்நாட்டு ராணுவ வீரர்கள் பாதுகாப்பு அளித்தனர்.
ஃப்டா-போன்கியுவ் சாலையில் பஸ் சென்றுகொண்டிருந்தபோது அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் சிலர் பஸ்களை குறிவைத்து சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் தங்கச்சுரங்க ஊழியர்கள் 37 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த தாக்குதல் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.