புலிகளின் காலத்துக்குப் பின்னரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவுகளை, பெரும்பாலும் தமிழரசுக் கட்சியே எடுத்து வந்திருக்கின்றது. அப்படியான நிலையில், கூட்டமைப்பின் ஏனைய இரு பங்காளிக் கட்சிகளான டெலோவும் புளொட்டும் தமிழரசுக் கட்சியின் முடிவுக்கு எதிராகவோ, இரா. சம்பந்தனின் முடிவைத் தாண்டியோ சிந்திக்கப்போவதில்லை.
ஐக்கிய தேசியக் கட்சிக்குள், ஜனாதிபதி வேட்பாளர் பிரச்சினை உச்சம்பெற்றிருந்த நிலையில், மன்னாரில் நடைபெற்ற அரச நிகழ்வொன்றில், சஜித்தை வரவேற்றுப் பேசிய செல்வம் அடைக்கலநாதன், “வருங்கால ஜனாதிபதி” என்றே மக்களிடம் அறிமுகப்படுத்தினார்.
அத்தோடு, எம்.கே.சிவாஜிலிங்கம் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடக் கட்டுப்பணம் செலுத்திய காலம் தொட்டு, அவரை எப்படியாவது போட்டியிடுவதிலிருந்து தடுத்துநிறுத்திவிட வேண்டும் என்று, செல்வம் ஓடிய ஓட்டம் அனைவருக்கும் தெரியும். அப்படியான நிலையில், சஜித்துக்கு எதிரான நிலைப்பாடொன்றுக்கு, செல்வம் செல்வதற்கான எந்த வாய்ப்புகளும் இல்லை.
சித்தார்த்தன், எப்போதுமே சம்பந்தனை மீறிச் செல்லாதவர். அப்படியான நிலையில், சஜித்துக்கான ஆதரவு நிலைப்பாட்டை ஓரிரு நாள்களில் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்துவிடும்.
அப்படியானால், ஜனாதிபதித் தேர்தலில் தன்னுடைய ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு, கூட்டமைப்பு ஏன் இவ்வளவு காலம் எடுத்துக் கொண்டிருக்கின்றது என்கிற விடயம் மேலெழுகின்றது.
உத்தியோகபூர்வமாகத் தன்னுடைய முடிவை அறிவித்தாலும் இல்லையென்றாலும், சஜித் ஆதரவு நிலைப்பாட்டில்தான் கூட்டமைப்பு இருக்கின்றது என்பது, அனைவரும் அறிந்த உண்மை. ஆனால், ஒரு கட்சியாக, தமிழ்த் தேசிய அரசியலில் கிட்டத்தட்ட ஏகநிலை பிரதிநிதித்துவத்தைப் பெற்றிருக்கும் கூட்டமைப்பு, தன்னுடைய இடத்தை எந்தவொரு விடயத்துக்காகவும் விட்டுக்கொடுக்காது. அதைத் தக்க வைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபடும்.
வடக்கு- கிழக்கில் மாத்திரமல்ல, தென் இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும் கூட்டமைப்பு தன்னுடைய இடத்தை விட்டுக்கொடுக்காது. அவ்வாறான நிலையில், எதிர்காலத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு, ஜனாதிபதித் தேர்தல் காலக் காட்சிகளைக் கூட்டமைப்பு கையாண்டிருக்கின்றது.
தமிழ் மக்கள் பேரவையின், சிவில் சமூகக் குழுவினரின் ‘மழைக்காளான்’ முயற்சியான பொதுவேட்பாளர் விடயத்தை, தமிழ் மக்கள் ஆரம்பம் முதலே இரசிக்கவில்லை. ஆனாலும், சம்பந்தன் அந்தக் குழுவைச் சந்திப்பதற்கு இணங்கினார்; பேசவும் செய்தார்.
ஏனெனில், கூட்டமைப்பு அனைத்துத் தரப்பின் குரல்களையும் கேட்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டிய தேவை இருந்தது. அந்தச் சந்திப்புகள் முடிந்து, சில நாள்களில், பல்கலைக்கழக மாணவர்களின் தமிழ்த் தேசியக் கட்சிகளுடனான கலந்துரையாடல்கள், கூட்டமைப்பினது (குறிப்பாக, தமிழரசுக் கட்சி) எதிர்காலத் திட்டமிடல்களுக்கு, மிகச்சிறந்த சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்தது.
கடந்த காலத்தில், கூட்டமைப்புக்கு எதிராக, மாற்றுத் தலைமைக் கோசத்தை எழுப்பிய தரப்புகளில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைத் தவிர்த்து, அனைத்துத் தரப்புகளும் கூட்டமைப்பின் முடிவுகளை ஒத்த முடிவுகளைப் பிரதிபலிக்க வேண்டி வந்தது.
குறித்த ஒரு வேட்பாளரைச் சுட்டிக்காட்டி, தன்னால் வாக்களிக்குமாறு தமிழ் மக்களைக் கோர முடியாது என்று சி.வி.விக்னேஸ்வரன் கூறினாலும், தேர்தல் புறக்கணிப்புக் கோசத்தையோ, கோட்டாபய ராஜபக்ஷ ஆதரவு நிலைப்பாட்டையோ அவர் எடுக்கவில்லை.
தமிழ் மக்களின் விருப்பத்தைத் தானும் மதிப்பது மாதிரிக் காட்டிக்கொண்டு, சஜித்துக்கான ஆதரவு நிலைப்பாட்டை, மறைமுகமாக அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். சுரேஷ் பிரேமசந்திரனைப் பொறுத்தளவில், தேர்தல் பகிஷ்கரிப்புக் கோசத்தை எதிர்க்கும் அவர், ஜனாதிபதித் தேர்தலில் பெரியளவில் கருத்துக்கூறாமல், மக்களின் முடிவுகளின்படி கடக்கவே விரும்புகிறார்.
மக்களின் மனங்களை மதித்து, அவர்களை வழிநடத்த முடியாதவர்கள், அரசியலுக்கு இலாயக்கற்றவர்கள் என்கிற தோரணையிலான கருத்தொன்றை, சஜித்துக்கான ஆதரவு நிலைப்பாட்டை அறிவிக்கும் தமிழரசுக் கட்சியின் ஊடக சந்திப்பின் போது, எம்.ஏ. சுமந்திரன் வெளியிட்டார்.
கடந்த பொதுத் தேர்தலில் கூட்டமைப்புப் பெற்ற ஏகநிலை வெற்றி, கூட்டமைப்புக்குத் தலைக்கனத்தைக் கொடுத்தது. என்ன கூச்சல்களைப் போட்டாலும், மாற்றுத்தலைமைக் கோசக்காரர்களால், தமிழ் மக்களைச் சென்று சேர முடியாது எனும் போக்கிலானது அது.
ஆனால், அந்தத் தலைக்கனத்தை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவு ஆட்டங்காண வைத்தது. தேர்தல் முறைக் குளறுபடிகள், வட்டார முறை என்பன தேர்தல் வாக்களிப்பிலும், முடிவுகளிலும் தாக்கத்தைச் செலுத்தினாலும், கூட்டமைப்பு மீதான அதிருப்தி என்பது, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் வெளிப்பட்டது.
அதைச், சுமந்திரன் ஊடகங்களிடம் ஏற்றுக்கொள்ளவும் செய்தார். அப்படியான நிலையில்தான், ‘மைத்திரியின் ஒக்டோபர் சதிப்புரட்சி’ என்கிற சம்பவம் நாட்டை அலைக்கழித்தது. அந்தச் சந்தர்ப்பத்தில், ஜனநாயகத்தைக் காப்பாற்றியதிலும், ராஜபக்ஷக்கள் ஆட்சியதிகாரத்தில் மீள அமர்வதைத் தடுத்ததிலும் கூட்டமைப்பு ஆற்றிய பங்கு, மக்களிடம் கூட்டமைப்பின் மீதான அதிருப்தியின் அளவைக் குறைத்தது.
இன்னொரு பக்கம், மாற்றுத்தலைமைக் கோசக்காரர்கள் தங்களுக்கிடையில் பிரிந்து நின்றனர். பிரிந்து நின்றது மாத்திரமல்லாமல், ஒருவரை ஒருவர் ஊடகங்களில் திட்டிக்கொள்வதில் காலத்தைக் கடத்திக் கொண்டிருந்தார்கள்.
இந்தக் காலத்துக்குள்ளேயே, ஜனாதிபதித் தேர்தல் ஒன்றுக்கான களம் விரிந்துவிட்டது. அப்போதுதான், பல்கலைக்கழக மாணவர்களின் தமிழ்த் தேசியக் கட்சிகளுடனான கலந்துரையாடல்களும், பொது இணக்கப்பாடும் கூட்டமைப்புக்கான இன்னோர் உன்னத சந்தர்ப்பமாக மாறியது.
பொது இணக்கப்பாட்டிலிருந்து முன்னணி வெளியேறிய போது, அது பெரியளவில் விமர்சிக்கப்பட்டது. பொது இணக்கப்பாட்டின்போது, முன்வைக்கப்பட்ட 13 அம்சக் கோரிக்கைகளுக்கும் தென் இலங்கை ஊடகங்கள் பெரிய முக்கியத்துவத்தைக் கொடுத்தன. ராஜபக்ஷக்களின் தேர்தல் மேடைகளில், அந்தக் கோரிக்கைகளே ஒருசில வாரங்களாகப் பேசப்பட்டன.
தென் இலங்கைத் தேர்தல் மேடைகள், 13 அம்சக் கோரிக்கைகளைப் பேசி முடிக்கவும், பெண்களுக்கான மாதவிடாய்கால சனிட்டரி நாம்கின்கள், இலவசமாக/ வரிச்சலுகையோடு வழங்கப்பட வேண்டும் என்கிற சஜித்தின் வாக்குறுதியை, ராஜபக்ஷ முகாம், கேலிப்பொருளாக்கி, தேர்தல் மேடைகளில் பேச ஆரம்பித்தது.
ஆனால், அதுவே, அவர்களுக்கு எதிர்மறையாகத் திரும்பி கவனம் பெற்றது. இன்னொரு பக்கம், கோட்டாவை நேரடி விவாதத்துக்கு அழைத்து, சஜித் தேர்தல் மேடைகளை ஆக்கிரமித்தார். அத்தோடு, சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனமும் கவனம் பெற்றது. இதனால், தமிழ்த் தேசியக் கட்சிகளின் 13 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தென் இலங்கையில் முன்னெடுக்கப்படவிருந்த ராஜபக்ஷக்களின் தேர்தல் வியூகம் இடையூறை சந்தித்தது.
சஜித்தை ஆதரிப்பதற்கான அறிவிப்பை வெளியிடுவதற்காக, கூட்டமைப்பின் ஒற்றை எதிர்பார்ப்பாக இருந்தது, சஜித்தின் விஞ்ஞாபனத்தில், நல்லாட்சிக் காலத்தில் வரையப்பட்ட புதிய அரசமைப்பு நிறைவேற்றப்படும் என்பதே.
இடைக்கால வரைபின் சாராம்சத்தை, சஜித்தின் விஞ்ஞாபனத்தின் ஒருபகுதி பிரதிபலித்தது. அவ்வாறான நிலையில், இனியும் சஜித்துக்கான ஆதரவைக் காலதாமதப்படுவது தேவையற்றது என்கிற நிலை உருவானது. அதுதான், தமிழரசுக் கட்சி, கூட்டமைப்பின் முடிவுகளை முன்னதாகவே, தன்னுடைய முடிவுகளாக அறிவித்திருக்கின்றது.
13 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, தேர்தல் கால வாக்குறுதிகள் சஜித்திடம் பெறப்படவில்லை என்கிற விடயம், தமிழ் மக்களிடம் கவனம் பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை. ஏனெனில், ஒரு விடயத்தை, அரசியலாக மக்கள் மயப்படுத்த வேண்டும் என்றால், அதற்காகப் படிப்படியாக உழைத்திருக்க வேண்டும். அப்படியான முயற்சிகளை, தமிழ்த் தேசிய அரசியலில் கடந்த காலங்களில் கூட்டமைப்பு மாத்திரமல்ல யாருமே செய்திருக்கவில்லை.
குறிப்பாக, கூட்டமைப்புக்கு எதிராக மாற்றுத்தலைமைமை உருவாக்க வேண்டும் என்று இயங்கிய தரப்புகளும் செய்திருக்கவில்லை. அப்படியான நிலையில், யதார்த்த அரசியலின் போக்கில், ‘கெட்டத்தில் பாதிப்புக்குறைந்த கெட்டதை’த் தெரிவு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. அதனை மீறிச்செல்லுமாறு, எந்தவொரு தரப்பும் கோரவும் முடியாது.
இதுவே, வேண்டாவெறுப்பாகவேனும் மக்களைக் கூட்டமைப்பின் பக்கமாகவும் நெருங்கச் செய்கிறது. ஏனெனில், தங்களின் முடிவுகளோடு இணங்கிச் செல்லும் தரப்பாக, மக்கள் கூட்டமைப்பைப் பார்க்கிறார்கள். அதுவே, கூட்டமைப்பை பெரியளவில் காப்பாற்றவும் உதவுகின்றது; அதுவே, இம்முறையும் நிகழ்ந்திருக்கின்றது.
புருஜோத்தமன் தங்கமயில்