புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பிரச்சாரங்களுக்கு அரசாங்கம் அரச வளங்களை சட்டவிரோதமான முறையில் பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டிய கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன இந்த முறைக்கேடுகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு முறைபாடுகள் செய்யப்பட்ட போதிலும் அது தொடர்கின்றது என்று குறிப்பிட்டார்.
இன்று இராஜகிரியவில் உள்ள வியத்மக காரியலயத்தில் செய்தியாளர் மாநாட்டில் இதை கூறிய குணவர்தன மேலும் தெரிவித்ததாவது,
அரச நிறுவனங்கள் தேர்தல் சட்டவிதிகளை மீறாமல் செயற்பட்டாலும். அரசாங்கம் அவற்றை மீறும்வகையில் அரச சொத்துக்களை முறையற்று பயன்படுத்துவது கவலைக்குரிய விடயமாகும்.
அரசாங்கம் தேர்தல் சட்டவிதிகளை மீறும் வகையிலும் , அரச திணைக்களங்களை பாதிக்கும் வகையிலும் நியமனங்கள் வழங்குதல் ,நேர்முகப் பரீட்சைகளை நடத்துதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதால் அரச திணைக்களங்களில் இருப்பவர்களுக்கும் இதனால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அரசசேவையாளர்கள் அரச துறையை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியினரால் முன்னெடுக்கப்படும் சட்ட மீறலர்கள் தொடர்பில் உடனே எமக்கு அறிவிக்கின்றன நாங்களும் அது தொடர்பில் ஆராய்ந்து பார்க்கிறோம்.
நாட்டில் இடம்பெற்ற மாபெரும் மோசடியான மத்தியவங்கி பிணைமுறி மோசடிகளும் இந்த அரசாங்கத்திலேயே இடம்பெற்றது. இந்த மோசடிகளின் போதும் அரச அதிகாரிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்ததுடன்,அதனை குறிப்பு புத்தகங்களிலும் பதிவு செய்து வைத்துள்ளனர்.
இந்நிலையில் இம்முறை பெரும்பாலான அரச ஊழியர்கள் எமது வேட்பாளர் கோத்தாபயவின் வெற்றிக்கு ஆதரவாக செயற்படுகிறார்கள் என்றும் தகல்கள் கிடைத்துள்ளது.
அரசாங்கம் தற்போது நிர்மாணபணிகள் முழுமைபெறாத அதிவேக நெடுஞ்சாலைகளை திறக்க நடவடிக்கை எடுத்துவருவதாகவும் , 500 பேருக்கு நியமனங்களை வழங்க உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இவை தேர்தல் சட்டவிதிகளை மீறும் செயற்பாடுகளாகும்.
ஆட்சி மாற்றம் இடம்பெறப்போகும் சந்தரப்பத்தில் அரசாங்கம் அரச துறையில் மேற்கொள்ளும் முறைகேடுகள் தொடர்பில் நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதுடன். இந்த சம்பவங்கள் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைபாடுகளை பொலிஸாரையும் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
அதேவேளை அரசியல் கட்சிகள் மறைமுகமாகவோ நேரடியாகவோ ஊடகங்களுக்கு விடுக்கும் அச்சுறுத்தல்களையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் உள்ளிட்ட அனைத்து வேட்பாளர்களும் ஊடகத்தின் சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் செயற்பட்டால் அவர்களை நாங்கள் வன்மையாக கண்டிப்பதுடன் , எதிர்ப்பும் தெரிவித்துக் கொள்கின்றோம் என அவர் தெரிவித்தார்.