முல்லைத்தீவு தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து நேற்று மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்ட நீர் உயிரின செய்கை விரிவாக்கல் அதிகாரி குமாரகுலசிங்கம் சங்கீதன் தலைமையிலான உத்தியோகத்தர்கள் மற்றும் மாங்குளம் விஷேட அதிரடிப்படையினரும் இணைந்து முல்லைத்தீவு முத்தையன்கட்டு குளம் பகுதியில் மேற்கொண்ட இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சட்ட விரோதமான முறையில் மீன்பிடிக்காக பயன்படுத்தப்பட்ட தடை செய்யப்பட்ட முக்கூட்டு வலைகளை உபயோகித்து மீன்பிடியில் ஈடுபட்ட ஜந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து ரூபா மூன்று இலட்சத்து 50 ஆயிரம் பெறுமதியான தடைசெய்யப்பட்ட முக்கூட்டு வலைகளும் ,இயக்குண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யபட்ட நபர்கள் முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபட்டதுடன் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், நான்கு பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவ் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட நீர் உயிரின செய்கை விரிவாக்கல் அதிகாரி குமாரகுலசிங்கம் சங்கீதன் தடைசெய்யப்பட்ட தங்கூசி மற்றும் முக்கூட்டு வலைகளை உபயோகித்து மீன்பிடிப்பதன் மூலம் நன்நீர் மாசடைவதுடன் குளங்களில் மீன்களின் உயிரிழப்புக்கள் அதிகம் ஏற்படுகிறது,
தொடர்ந்தும் இவ்வாறான சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபடுபவர்களை கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.