விசேட தேவையுடைய இராணுவத்தினர் கொழும்பில் போராட்டம்

341 0

protest1பிரேரிக்கப்பட்ட சேவை ஊதிய கொடுப்பனவை வழங்க கோரி, விசேட தேவையுடைய இராணுவத்தினரினால் மேற்கொள்ளப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.

இந்த ஆர்ப்பாட்டம், இராணுவ உரிமைகளை பாதுகாக்கும் தேசிய சக்தி என்ற அமைப்பினால் முன்னெடுக்கப்படுகின்றது.

இன்று காலை கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையத்திற்கு முன்பாக விசேட தேவையுடைய இராணுவத்தினரினால் ஆரம்பிக்கப்பட்ட பாதயாத்திரை, ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றது.

இதன்போது, அமைப்பை சார்ந்த 6 பேர் ஜனாதிபதி செயலகத்திற்கு சென்று தமது பிரச்சனைகள் தொடர்பான மனுவை மேலதிக செயலாளரிடம் கையளித்தனர்.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக இன்று முற்பகல் லோட்டஸ் சுற்றுவட்டத்தின் காலிமுகத்திடலை நோக்கியதான வீதி தற்காலிகமாக காவல்துறையினரால் மூடப்பட்டது.

பின்னர், எதிர்ப்பாட்டாளர்கள் கொழும்பு கோட்டை நிலையத்திற்கு முன்னால் உள்ள வீதியின் ஒரு வழிப்பாதையினை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக புறக்கோட்டையிலிருந்து ஓல்கொட் மாவத்தையின் ஊடாக கோட்டை நோக்கிய பாதையை சுமார் நான்கு மணி நேரம் போக்குவரத்துக்கு தடைப்பட்டிருந்தது.

தற்போதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்கள், தமது கோரிக்கைக்கு எழுத்து மூல உறுதியளிக்கும் வரை போராட்டம் தொடரும் என குறிப்பிட்டுள்ளனர்.