மத்திய வங்கியின் முறி விற்பனை தொடர்பான கோப் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பிலான சட்ட நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையே தாம் எதிர்பார்ப்பதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் கணக்காய்வாளர் மற்றும் கோப் குழுவின் தலைவர்; சுனில் ஹந்துன் நெத்தி ஆகியோரால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளில் சிறிய அளவிலேனும் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை என்பதை தாம் பொறுப்புடன் கூறுவதாக அமைச்சர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மத்திய வங்கியின் முறி விற்பனை மோசடி தொடர்பில் ஜனாதிபதி தமது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் என ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கடுவெல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார்.
மத்திய வங்கியின் முறி விற்பனையினால் ஆயிரம் பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான அரச நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக பந்துல குணவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் நாட்டிற்கு திரும்பி வராவிட்டால் சர்வதேச காவல்துறையின் உதவியுடன் கைதுசெய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
விரைவில் அர்ஜூன மகேந்திரனுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் மகிந்த அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.