கட்சியை உடைக்க மகிந்த, ஜே. ஆர். ஜயவர்தனவிடம் சம்பளம் வாங்கினார்

413 0

chandrika_jpg_2361767fமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக பிளவுப்படுத்த தொடர்ந்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்தவர் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

எப்படியான முயற்சிகளை மேற்கொண்டாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலுவாக முன்னோக்கி செல்லும் எனவும் அவர் சுட்டி்ககாட்டியுள்ளார்.

கம்பஹா யக்கல பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 1977 ஆம் ஆண்டு மிகப் பெரிய தோல்வியை சந்தித்தது. 8 நாடாளுமன்ற உறுப்பினர்களே சுதந்திரக் கட்சிக்கு இருந்தனர்.

ஜே.ஆர். ஜயவர்தன , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவியாக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமையை பறித்தார்.

குடியுரிமையை பறித்து சிறிமாவோ பண்டாரநாயக்கவை அழிக்கலாம் என எண்ணினார். தந்திரவாதியாக ஜே.ஆர். ஜயவர்தன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை எப்படி உடைப்பது என எண்ணினார். கட்சியில் இருக்கும் சிலரை பயன்படுத்தி கட்சியை உடைக்க முயற்சித்தார்.

சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவர் மைத்திரிபால சேனாநாயக்க மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோரை பயன்படுத்தினார்.

இவர்களுக்கு மாதம் சம்பளம் வழங்கப்பட்டது. மகிந்த எனக்கு எதிராக வழக்கு தொடரலாம். என்னிடம் சம்பளம் பெற்றுக்கொண்டமைக்கான பற்றுச்சீட்டு உள்ளது.

ஜே.ஆர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழிக்கும் பொறுப்பை இவர்களுக்கு கொடுத்தார்.

குடியுரிமை இல்லாத சிறிமாவோ கட்சியின் தலைவராக இருக்க முடியாது. அவரை கட்சியில் இருந்து விலக்க வேண்டும் என்று இவர்கள் பிரசாரத்தை தொடங்கினர்.

இலங்கை முழுவதும் இவர்கள் கூட்டங்களை நடத்தி இந்த பிரசாரத்தை மேற்கொண்டனர். இதனால், கட்சி இரண்டாக பிளவுப்பட்டது.

கட்சியை பிளவுப்படுத்த அன்று தலைமையேற்றவர்களில் மகிந்த ராஜபக்சவும் ஒருவர். தற்போது மீண்டும் அதனை ஆரம்பித்துள்ளார்.

தற்போது பாரியளவில் கட்சியை பிளவுப்படுத்த மகிந்த ராஜபக்ச முயற்சித்து வருகிறார்.

கட்சியை சுத்தப்படுத்தி, தூய கட்சியாக முன்னெடுத்துச் செல்லவே மக்கள் எமக்கு வாக்களித்தனர்.

ராஜபக்சவுடன் இருக்கும் சிலர் இல்லாமல் போவதால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இல்லாமல் போய்விடாது. வருபவர்களை இணைத்து கொள்வோம், வராதவர்கள் இருக்கட்டும் எமக்கென்ன.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஆட்சி நடத்துவதால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு நன்மையே அன்றி நஷ்டமில்லை.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து நாம் ஆட்சியை மாற்றவில்லை என்றால், அடுத்த தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சிதறி போயிருக்கும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.