சிக்கலில் சிக்கியுள்ள லசந்த கொலை

274 0

lasanthacaseசன்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அரச தரப்பில் இருந்து கொடுக்கப்படும் அழுத்தங்கள் காரணமாக விசாரணைகள் இடையில் நின்று போகும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு திரிபோலி இராணுவ முகாமில் பணியாற்றிய 17 இராணுவத்தினரை கொண்ட குழுவே லசந்த விக்ரமதுங்கவின் கொலையுடன் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் இவர்கள் திரிபோலி முகாமில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் இதுவரை மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனடிப்படையில், லசந்த கொலை செய்யப்படுவதற்கு முன்னரான இரண்டு தினங்களில் முகாமில் இருந்த 270 இராணுவத்தினரின் பெயர் விபரங்களை குற்றப் புலனாய்வு திணைக்களம், நீதிமன்றத்தின் உத்தரவின் கீழ் பெற்றுக்கொண்டுள்ளது.

270 இராணுவத்தினரில் தலா 20 பேரை அழைத்து விசாரணை நடத்த குற்றப் புலனாய்வு திணைக்களம் திட்டமிட்டிருந்தது.

இதனடிப்படையில், ஒக்டோபர் 26 ஆம் திகதி 20 பேர் அடங்கிய குழுவை அழைத்து குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணை நடத்தியதுடன் 27 ஆம் திகதி அடுத்த 20 பேரை அழைத்து விசாரணை நடத்தியுள்ளது.

27 ஆம் திகதி அரசாங்கத்தின் உயர் தரப்பை சேர்ந்த ஒருவர் இராணுவத்தினரை இவ்வாறு அணி அணியாக அழைத்து விசாரணை நடத்த வேண்டாம் என கூறியுள்ளார்.

இதன் காரணமாக லசந்தவை கொலை செய்த அணியில் இடம்பெற்றிருந்த 17 பேரை சரியாக அடையாளம் காண முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்களை அடையாளம் காண முடியாவிட்டால், லசந்த கொலை வழக்கை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலைமை ஏற்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

லசந்த விக்ரமதுங்க, 2009 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி தெஹிவளை அத்திட்டிய பிரதேசத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த சிலரது தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தார்.

கொலை செய்யப்பட்டு 7 வருடங்களின் பின்னர், மேலதிக விசாரணைக்காக லசந்தவின் உடல் கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி தோண்டி எடுக்கப்பட்டது.