அரசு பணிகளுக்கு தனிப்பட்ட இமெயில் கணக்கினை பயன்படுத்தியது தொடர்பாக மீண்டும் விசாரணை தொடங்கப்படும் என தேசிய புலனாய்வு அமைப்பு அறிவித்துள்ளதால் அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடும் ஹிலாரி கிளிண்டனின் செல்வாக்கு சரியக்கூடும் என்ற நிலையில் பிரபல நடிகையும், பாடகியுமான ஜெனிபர் லோபெஸ், ஹிலாரியை ஆதரித்து இலவச இசை நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி தேர்தல் நடக்கிறது.
இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக, முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகிறார். குடியரசு கட்சியின் சார்பில் பிரபல ரியல் எஸ்டேட் அதிபரான டொனால்ட் டிரம்ப் அவரை எதிர்த்து களம் காண்கிறார்.
குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப்-ஐவிட ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனுக்கு 6 சதவீதம்பேர் அதிகமான ஆதரவு அளித்துள்ளனர். அதிபர் தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் ஹிலாரியின் பிரசார வியூகத்தால் ஆதரவு சதவீதம் அதிகரிக்கலாம். பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறும் அவர் நிச்சயமாக ஆட்சியை கைப்பற்றுவார் என்று கருதப்படுகிறது.
இதற்கிடையில், அமெரிக்காவில் 2009-13 காலகட்டத்தில் வெளியுறவுத்துறை மந்திரியாக பதவி வகித்தபோது, தனது தனிப்பட்ட இமெயில் கணக்கினை அரசு பணிகளுக்கு ஹிலாரி கிளிண்டன் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்து பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
கடந்த ஆண்டு இதுதொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த ஹிலாரி கிளிண்டன், “தனிப்பட்ட இமெயில் கணக்கை அரசுப்பணிக்கு பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. இருப்பினும் நான் இரண்டு இமெயில் கணக்குகளை பராமரித்து வந்திருக்க வேண்டும். ஒன்றை தனிப்பட்ட தேவைகளுக்கும், மற்றொன்றை அரசுப்பணி தொடர்பானவற்றுக்கும் பயன்படுத்தி இருக்க வேண்டும். அதை செய்யாமல் இருந்தது தவறுதான். அதற்காக நான் வருந்துகிறேன். நான் அந்த தவறுக்கு பொறுப்பேற்கிறேன்” என கூறியிருந்தார்.
இதுதொடர்பாக, ஹிலாரியின் அரசு உதவியாளர் மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகளிடம் தேசிய புலனாய்வு போலீசார் (எப்.பி.ஐ.) ஏற்கனவே கடந்த ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியும், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளருமான ஹிலாரி கிளிண்டனிடம் இமெயில் விவகாரம் தொடர்பாக தேசிய புலனாய்வு போலீசார் மூன்றரை மணிநேரம் இந்த விசாரணை நடத்தியதாகவும், விசாரணைக்கு ஹிலாரி மிகவும் சாதகமான முறையில் ஒத்துழைப்பு நல்கியதாகவும் எப்.பி.ஐ. தலைமை அலுவலகம் முன்னர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருந்தது.
அத்துடன் இந்த விவகாரம் ஓய்ந்து விட்டதாக கருதப்பட்டு வந்த நிலையில் ஹிலாரியின் இமெயில்கள் தொடர்பாக மீண்டும் விசாரணையை தொடர உள்ளதாக அமெரிக்காவின் தேசிய புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ. தற்போது அறிவித்துள்ளது. தனது தனிப்பட்ட இமெயில் மூலம் ஹிலாரி பகிர்ந்துகொண்ட மேலும் சில தகவல் திரட்டுகளை ஆய்வுசெய்து, விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுதொடர்பான அறிவிப்பை எப்.பி.ஐ. இயக்குனர் ஜேம்ஸ் காமே வெளியிட்டதும், இந்த அறிவிப்பின் எதிரொலியாக மக்களிடையே ஹிலாரியின் செல்வாக்கு சரிந்து விடுமோ..? என ஜனநாயக கட்சியினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.இந்நிலையில், இதுதொடர்பாக புளோரிடா மாநிலத்தில் தனது ஆதரவாளர்களிடையே பேசிய ஹிலாரி, ‘தேர்தலுக்கு இன்னும் சிலநாட்களே இருக்கும் நிலையில் இதைப்போன்ற முழுமையான தகவல்கள் இல்லாத அரைகுறை அறிவிப்பை வெளியிடுவது விசித்திரமாக உள்ளது’ என குறிப்பிட்டிருந்தார்.
மேலும், இன்று டேய்ட்டோனா கடற்கரை பகுதியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய அவர், ’எப்.பி.ஐ.-யின் அறிவிப்பு விசித்திரமானது மட்டுமல்ல, இதுவரை இல்லாத புதுமையாகவும் உள்ளது. இதுதொடர்பான உண்மைகளை முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும் என வாக்காளர்கள் விரும்புகின்றனர். எனவே, இவ்விவகாரம் தொடர்பான முழு விளக்கத்தை அளிக்கும்படியும், எல்லா விபரங்களையும் வெளிப்படையாக அறிவிக்கும்படியும் எப்.பி.ஐ. இயக்குனர் ஜேம்ஸ் காமே-வை நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஹிலாரியின் சரியும் செல்வாக்கை நிமிர்த்த பிரபல நடிகையும், பாடகியுமான ஜெனிபர் லோபெஸ், மியாமி நகரில் இன்று இலவச இசை நிகழ்ச்சியை நடத்தினார். இந்த இசை நிகழ்ச்சியின்போது மேடையில் ஹிலாரியின் கையை உயர்த்தி பிடித்த ஜெனிபர் லோபெஸ், ’நாம் நான்முனை சந்திப்பில் இருக்கிறோம், எதிர்காலத்தை சென்றடைய சரியான சாலையை தேர்ந்தெடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டார்.
இதேபோல், கிளீவ்லேண்ட் பகுதியில் பிரபல ராப் பாடகர் ஜே இசட் (Jay Z), பிலடெல்பியாவில் பிரபல பாடகி கேட்டி பெரி ஆகியோருடனும் ஹிலாரி ஒரேமேடையில் தோன்றி இசை பிரசாரத்தின் வாயிலாக வாக்காளர்களை கவர திட்டமிட்டுள்ளார்.