தேவரின் வாழ்க்கை வரலாறு இளைஞர்களுக்கு வழிகாட்டியாக திகழ்கிறது

319 0

201610310724452211_youth-guides-pasumpon-muthuramalinga-thevar-life-history_secvpfபசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு இளைஞர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக திகழ்கிறது என மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 109-வது பிறந்தநாளையொட்டி, மதுரை, கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் திருவுருவச் சிலைக்கு, தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் தெப்பக்குளம் எதிரில் உள்ள மருது சகோதரர்கள் சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதைத்தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சென்ற மு.க.ஸ்டாலின், பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்திற்கு சென்று, தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்றதுடன், தேவரின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் இது குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பசும்பொன்னில் இருக்கும் தேவர் பெருமகனார் நினைவிடத்திற்குச் சென்று, அவருடைய 109-வது பிறந்த நாள் விழா மற்றும் குரு பூஜையில் கலந்து கொண்டு, தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.

நம்மை சுற்றியுள்ள மாநிலங்கள் எல்லாம் நதி நீர் பிரச்சினையில் நம்மை வஞ்சிக்க முயற்சிக்கின்ற நேரத்தில் “இந்த தேசத்தின் அஸ்திவாரம் விவசாயிதான்” என்று கூறிய தேவர் திருமகனாரின் கருத்தை நினைத்துப் பார்க்கிறேன். தமிழ் மொழியின் மீது தீராக் காதல் கொண்ட தேவர் பெருமகனார், “தமிழ் மொழி ஆட்சி மொழியாக வேண்டும். அப்போதுதான் அந்த மொழிக்கு நாம் மரியாதை செலுத்தியவர்கள் ஆவோம்” என்று ஆணித்தரமாக குரல் எழுப்பியவர். சுதந்திரப் போராட்ட வீரரான அவரின் சேவைகளை தமிழகமும், இந்த நாடும் என்றும் மறக்க முடியாது. நாமும் மறக்க முடியாது.

அனைத்து தரப்பு மக்களையும் அன்புடன் அரவணைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசையை நெஞ்சில் சுமந்து தன் வாழ்நாள் முழுவதும் அதற்காக உழைத்தவர், பாடுபட்டவர். அப்படிப்பட்ட தேவர் பெருமகனாரின் வாழ்க்கை வரலாறு இன்றைய இளைஞர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகத் திகழ்கிறது என்பதில் எள் முனையளவும் சந்தேகமில்லை.

தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நினைவிடம் சிறப்பாக அமைக்கப்பட்டது. அவரது பெயரில் அரசு கல்லூரி உருவாக்கப்பட்டது. எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற் போல் மதுரையில் 13 அடி உயரத்திற்கு தேவர் சிலை அமைக்கப்பட்டது. நாடு போற்றும் தலைவருக்கு அவரது நினைவிடத்திற்கு வந்து மரியாதை செலுத்தியதில் பெருமையடைகிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.