ஜெயலலிதாவுக்கு லண்டன் டாக்டர் தொடர்ந்து சிகிச்சை

276 0

201610301815243515_london-doctor-continued-treatment-jayalalithaa_secvpfமுதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு லண்டன் டாக்டர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு அப்பல்லோ டாக்டர்கள் குழுவும், லண்டன் டாக்டர் ஜான் ரிச்சர்டு பீலே மற்றும் டெல்லி எய்ம்ஸ் டாக்டர்களும் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

தீவிர சிகிச்சைக்குப்பின் முதல்- அமைச்சர் ஜெயலலிதா குணம் அடைந்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்த கட்டமாக முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிங்கப்பூரில் இருந்து வந்த பெண் பிசியோதெரபிஸ்டுகள் பிசியோ தெரபி சிகிச்சை அளித்தனர்.

லண்டன் டாக்டர் ஜான் ரிச்சர்டு பீலே ஏற்கனவே முதல்கட்ட சிகிச்சை அளித்தார். அதன்பிறகு மீண்டும் சிகிச்சை அளிக்க டாக்டர் ரிச்சர்டு கடந்த ஞாயிற்றுக் கிழமை சென்னை வந்தார். அவர் தொடர்ந்து சென்னையிலேயே தங்கியிருந்து ஜெயலலிதாவுக்கு அளிக்க வேண்டிய சிகிச்சை முறைகள் பற்றிய ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

இன்று காலை டாக்டர் ரிச்சர்டு அப்பல்லோ ஆஸ்பத்திரி வந்து மருத்துவ ஆலோசனைகள் வழங்கி முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலையை கண்காணித்து வருகிறார்.

ஜெயலலிதா பூரண குணம் அடைய வேண்டி ஆஸ்பத்திரி முன்பு இன்றும் அ.தி.மு.க. தொண்டர்கள் தொடர் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். வெள்ளை பூசணிக்காயில் நெய் தீபம் ஏற்றி வேண்டினர்.

அ.தி.மு.க. தொண்டர் ஒருவர் தலையில் பூசணிக்காயை வைத்து அதன் மீது கற்பூரம் ஏற்றி ஆஸ்பத்திரியை சுற்றி வந்தார்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி கூறியதாவது:-

முதல்- அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் டாக்டர்கள்  தெரிவித்துள்ளனர். தீபாவளிக்கு மறுநாளான இன்று அமாவாசை தினம் என்பதால் கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 68 பூசணிக்காயில் நெய் தீபம் ஏற்றி பூஜை நடந்தது.

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அம்மாவுக்காக பிரார்த்தனை செய்து வருகிறார்கள். எல்லோருடைய பிரார்த்தனையால் பூரண நலம்பெற்று வீடு திரும்புவார்.இவ்வாறு அவர் கூறினார்.