ஆழ்துளை கிணறுகளில் தவறி விழும் குழந்தைகளை மீட்க கருவி கண்டுபிடித்தால் ரூ.5 லட்சம் பரிசு

501 0

ஆழ்துளை கிணற்றில் தவறுதலாக விழும் குழந்தைகளை மீட்கும் கருவியை கண்டுபிடித்தால் ரூ.5 லட்சம் பரிசு வழங்க திட்டமிட்டுள்ளதாக தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை முதன்மை செயலாளர் தெரிவித்துள்ளார்.திருச்சி அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் 2 வயது சிறுவன் சுஜித் தவறி விழுந்து பலியானான். இந்த சம்பவம் கடுமையான சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைபோன்று மீண்டும் ஒரு துயர சம்பவம் நடைபெறாத வகையில் தமிழக அரசு பல்வேறு வகையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்தநிலையில் ஆழ்துளை கிணற்றில் தவறுதலாக விழும் குழந்தைகளை மீட்கும் கருவியை கண்டுபிடித்தால் ரூ.5 லட்சம் பரிசு வழங்க திட்டமிட்டுள்ளதாக தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை முதன்மை செயலாளர் சந்தோஷ் பாபு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சந்தோஷ்பாபு தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் போட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-

இந்த தீபாவளி, இந்தியாவில் உள்ள அனைவருக்கும் குறிப்பாக தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு சோகமாக அமைந்துவிட்டது. அலட்சியத்தால் மீண்டும் விலைமதிப்பற்ற ஒரு உயிரை இழந்துவிட்டோம். இதுவே இந்தியாவில் உயிரிழந்த கடைசி குழந்தையாக இருக்கவேண்டும். இதனை தடுப்பதற்கு அவசரமாக நமக்கு தீர்வு தேவைப்படுகிறது. தகவல் தொழில்நுட்பத்துறை இதற்கு தீர்வு காண திட்டமிட்டுள்ளது.

ஆழ்துளை கிணறு, சுரங்கங்களில் விழும் குழந்தைகளை மீட்க உதவும் சிறந்த கருவியை உருவாக்கினால் தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் முதல் பரிசாக ரூ.5 லட்சம் வழங்க திட்டமிட்டுள்ளோம். தனிநபர், புதிய நிறுவனங்கள், கம்பெனிகள் என யார் உதவினாலும் பரிசுத் தொகை வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.