சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கடத்தப்பட்ட ஆண் குழந்தை மீட்பு

335 0

201610310811014112_woman-arrested-salem-government-hospital-kidnapped-baby_secvpfசேலம் அரசு ஆஸ்பத்திரியில் கடத்தப்பட்ட ஆண் குழந்தை நேற்று மீட்கப்பட்டது. குழந்தையை கடத்திய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவருடைய மனைவி இந்து (வயது 24). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இந்துவுக்கு கடந்த 24-ந்தேதி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை 26-ந்தேதி ஒரு பெண் கடத்திச் சென்றுவிட்டார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆஸ்பத்திரி பிரசவ வார்டு பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் ஒரு மர்ம பெண், குழந்தையை கடத்திச் சென்றது பதிவாகி இருந்தது. குழந்தையை மீட்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

குழந்தையை கடத்திச் சென்ற பெண் சேலத்தை அடுத்த மல்லூர் அருகே உள்ள சந்தியூர் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. போலீசார் அங்கு சென்று விசாரித்தபோது குழந்தையை கடத்தியவர் வெண்ணிலா (22) என்பது தெரிந்தது. அவரது கணவர் சதீஷ்குமாரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

அவர் தனது மனைவிதான் குழந்தையை கடத்தி வந்ததாகவும், தற்போது அவர் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளதாகவும் கூறினார். தனிப்படை போலீசார் அங்கு சென்று பாலக்கோடு அருகே குழந்தையுடன் நின்ற வெண்ணிலாவை கைது செய்து குழந்தையை மீட்டனர்.

வெண்ணிலாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. வெண்ணிலாவுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு சதீஷ்குமாருடன் திருமணம் நடந்தது. அவர்களுக்கு குழந்தை இல்லை. வெண்ணிலாவின் கர்ப்பப்பை சுருங்கி இருப்பதால் குழந்தை பிறப்பதற்கு நீண்டகாலம் ஆகலாம் அல்லது குழந்தை பிறக்காமல்கூட போகலாம் என்று டாக்டர்கள் கூறியதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த வெண்ணிலா, தான் கர்ப்பம் அடைந்துள்ளதாக பலரிடம் கூறினார். இதற்காக அவர் வயிற்றில் துணியை கட்டி நாடகமாடினார். 26-ந் தேதி வெண்ணிலா வேலைக்கு சென்ற கணவரை தொடர்பு கொண்டு தனக்கு பிரசவவலி இருப்பதாகவும், மல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்வதாகவும் கூறினார்.

இதை நம்பிய சதீஷ்குமார் வீட்டுக்கு வந்ததும் அங்கு சென்று விசாரித்தபோது அவர் அங்கு வரவில்லை என்பது தெரிந்தது. மாலையில் மீண்டும் கணவரை தொடர்புகொண்ட வெண்ணிலா தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும், வீட்டுக்கு வந்து கொண்டிருப்பதாகவும் கூறினார்.

சந்தேகமடைந்த சதீஷ்குமார் மனைவியிடம் குழந்தை எங்கு பிறந்தது? இது யாருடைய குழந்தை? என்று கேட்டார். அதற்கு அவர், ஒரு கோவிலில் குழந்தை பிறந்ததாக கூறினார். ஆனால் சதீஷ்குமார் இதை நம்பவில்லை. இதற்கிடையே, வெண்ணிலா குழந்தையுடன் உறவினர் வீட்டுக்கு சென்றார். உறவினர்களும் இதை நம்பாததால் அங்கிருந்து வெளியேறியபோது தான் போலீசார் அவரை பிடித்தனர்.

மீட்கப்பட்ட குழந்தையை போலீசார் நேற்று மாலை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் இந்துவிடம் ஒப்படைத்தனர். இந்து ஆனந்த கண்ணீருடன் குழந்தையை வாங்கி முத்தமிட்டு கொஞ்சினார்.