சென்னையில், தீபாவளி பண்டிகையின் போது மழை இல்லாததால் காற்று மாசு கடந்த ஆண்டை காட்டிலும் அதிகமாக இருந்ததாக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை விளக்கு ஏற்றி, பட்டாசு வெடித்து கொண்டாடப்படுகிறது. பட்டாசு வெடிப்பதால் வெளிவரும் புகை காற்று மண்டலத்தின் இயல்புநிலையை பாதிக்கிறது.
இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பட்டாசு வெடிக்க தடை செய்யப்பட்டதுடன், 125 டெசிபெல்லுக்கு அதிகமான ஒலி உண்டாக்கும் பட்டாசுகளை வெடிக்கவும் சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், வாரியச் சுற்றுச்சூழல் ஆய்வகங்கள் மூலமாக தீபாவளிக்கு முந்தைய ஒரு நாள் மற்றும் தீபாவளி நாளன்று 24 மணி நேர காற்று தர ஆய்வு, 6 மணி நேர ஒலி அளவுச் சோதனை செய்து, பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் தாக்கத்தை கண்டறிந்து வருகிறது.
இதன்படி கடந்த 24-ந்தேதியில் இருந்து கடந்த 29-ந்தேதி வரை ஆய்வுகள் செய்யப்பட்டு, காற்றின் தரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கத்தை தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது மழை இல்லாததால் காற்று மாசு கடந்த 2015-ம் ஆண்டை காட்டிலும் அதிகமாக உள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
சென்னை மாநகரில் காற்று மாசு குறித்து திருவல்லிக்கேணி குடியிருப்புப்பகுதி, பெசன்ட்நகர் குடியிருப்பு பகுதி, நூங்கம்பாக்கம் குடியிருப்பு பகுதி, சவுகார்பேட்டை கலப்புப்பகுதி, தியாகராயநகர் வர்த்தகப்பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டது. இந்த இட ங்களில் சல்பர்-டை-ஆக் சைடு மற்றும் நைட்ரஜன்-டை-ஆக்சைடு அளவுகள் நிர்ணயிக்கப்பட்டள்ள அளவான 80 மைக்ரோ கிராமிற்கு உட்பட்ட தாகவே கடந்த 24 மற்றும் 28-ந்தேதிகளில் இருந்தது.
மிதக்கும் துகள்கள் நூங்கம்பாக்கம், சவுகார்பேட்டை மற்றும் தியாகராயநகர் ஆகிய இடங்களில் நிர்ணயிக்கப்பட்டுள்ள 100 மைக்ரோ கிராம் அளவை விட இரு நாட்கள் அதிகமாக காணப்பட்டன. கடந்த 29-ந்தேதி தீபாவளி அன்று சென்னையில் ஆய்வு செய்யப்பட்ட இடங்களில் மிதக்கும் துகள்களின் அளவு 100 மைக்ரோ கிராம் அளவை விட அதிகமாக காணப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.