தேர்தலுக்கு பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படும்- மரிக்கார்

250 0

ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்தவுடன், நாடாளுமன்றம் கலைக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். மேலும் எஸ்.எம்.மரிக்கார் கூறியுள்ளதாவது,  “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,  13 அம்சக் கோரிக்கை தொடர்பாக இதுவரை எம்முடன் எந்தவொரு கலந்துரையாடலிலும் ஈடுபடவில்லை.

நாம் யாருடனும், இரகசிய ஒப்பந்தங்களை செய்துக்கொள்ளப்போவதில்லை. சஜித் பிரேமதாஸவுக்கு என்று ஒரு கொள்கை இருக்கிறது.

அதற்கிணங்கத்தான் நாம் செயற்பட இருக்கிறோம். எமது இந்தப் பயணத்தில் குற்றவாளிகள் அல்லாத, நீதிமன்றங்களில் வழக்குகள் இல்லாத எந்தவொரு நபரும் இணைந்துக் கொள்ள முடியும். எமது முயற்சிகளின் பலனாகத்தான் சஜித் பிரேமதாஸ இன்று ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.

எமது இப்போதைய ஒரே குறிக்கோள் சஜித் பிரேமதாஸவை வெற்றிப்பெறச் செய்வது மட்டும்தான்.  நாம் இந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியடைந்தவுடன், உடனடியாக நாடாளுமன்றத்தை கலைப்போம்.

அப்போது, புதிய நாடாளுமன்றத்தை தெரிவு செய்யக்கூடிய சந்தர்ப்பமும் மக்களுக்கு கிடைக்கும். அதற்கிணங்க, புதிய பிரதமரும் தெரிவுசெய்யப்படுவார். இதனை நாம் அந்த நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம்.

அத்தோடு, ரவூப் ஹக்கீம் தொடர்பாகவும் பிழையான கருத்துக்கள் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவர் சஹ்ரானுடன் ஒப்பந்தம் செய்துக் கொண்டார் என்றுக் கூறப்படுகிறது.

ஒருவர் நிகழ்ச்சியொன்றுக்கு சென்றால், பொது மக்கள் வந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்கிறார்கள். இப்படி புகைப்படம் எடுத்துக் கொள்வதை எப்படி ஒப்பந்தம் என்றுக் கூற முடியும்?

இவ்வாறான பிழையான கருத்துக்களை பரப்புவதை அனைவரும் நிறுத்த வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.