வடக்கில் 3இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களின் வாக்குகள் சஜித் பிரேமதாசவுக்கே கிடைக்குமென அமைச்சர் நலின் பண்டார தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நலின் பண்டார மேலும் கூறியுள்ளதாவது, “டக்ளஸ் தேவானந்த, பெரும் தொகை நிதியை செலவு செய்து பேருந்துகள் ஊடாக கூட்டங்களுக்கு மக்களை அழைத்து வருகின்றனர்.
அவ்வாறே பெரும்பாலான கூட்டங்களுக்கு மக்கள், அழைத்து வரப்படுகின்றனர். வவுனியா உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் சிங்கள பிரதேசங்களில் இருந்துமே மக்கள் கொண்டு வரப்பட்டு அங்கு காண்பிக்கப்பட்டனர். உண்மையில் அங்கு மக்கள் வருகை தரவில்லை என்றுதான் கூற வேண்டும்.
இதேவேளை நாமல் ராஜபக்ஷ, தென்னிலங்கையில் ஒருவகையான கருத்துக்களையும் வடக்கில் வந்து ஒருவகையான கருத்துக்களையும் கூறுகின்றார்.
ஆனால் சஜித் பிரேமதாச, அவ்வாறு இல்லை. தெற்கில் சொல்வதையே வடக்கிலும் சொல்வார். யாழ்ப்பாணம் விமான நிலையம் தொடர்பாக தென்னிலங்கையில் ஒருவகையான இனவாதம் பேசப்பட்டது.
அதேநேரம் வடக்கில் நாமல் இன்னொருவகையில் கருத்து தெரிவித்தார். இவர்கள் ஒவ்வொரு பிரதேசத்திற்கும் ஒவ்வொரு வகையான கருத்துக்களை கூறுகின்றனர்.
இதேவேளை வடக்கில் பல பகுதிகளிலும் சஜித் பிரேமதாச, பிரச்சார கூட்டங்களில் பங்குகொள்ள உள்ளார். அவரை மக்கள் நிச்சயம் ஆதரிப்பார்கள்.
அந்தவகையில் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து 3 இலட்சத்திற்கு அதிகமான வாக்குகள் சஜித் பிரேமதாசவிற்கு கிடைக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.